கோலாலம்பூர்: மலேசியாவில் நடந்த பல உயர் பதவியிலிருந்தவர்களின் கொலைச் சம்பவங்களுக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கும் தொடர்பு உள்ளது எனக் குறிப்பிடும், எந்த ஆதாரமும் இல்லை என்று காவல் துறை வட்டாரம் தெரிவித்துள்ளதாக மலேசியா கினி செய்தித் தளம் பதிவிட்டுள்ளது.
கடந்த ஞாயிறு, இந்த வழக்குகள் குறித்து, தம்மை ஏன் இன்னும் விசாரிக்கவில்லையென்று, நஜிப் தனது முகநூல் பக்கத்தில் பகிரங்கமாக பதிவிட்டிருந்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக தம்மை பல்வேறு கொலைச் சம்பவங்களில் ஈடுபடுத்தியதோடு இல்லாமல், ஜசெக கட்சி அதனை ஓர் ஆயுதமாகக் கையில் ஏந்தி பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தியதை அவர் நினைவுக்கூர்ந்தார்.
ஆதாரங்கள் இருக்குமாயின் காவல் துறை கண்டிப்பாக நஜிப்பை விசாரிக்கும் என காவல் துறை வட்டாரம் தெரிவித்தது.
இதற்கிடையே, கெவின் மொராய்ஸ்சின் தம்பியான ரிச்சார்ட் மொரய்ஸ், முன்னதாக நஜிப்பிற்கும், தமது அண்ணனின் இறப்பிற்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக, அல்தான்துன்யா, ஹுஸ்சான் நஜாடி, தியோ பெங் ஹொக் மற்றும் அகமட் சார்பானி ஆகியோரின் கொலை வழக்கில், முன்னாள் பிரதமர் நஜிப்பை அப்போதைய எதிர்கட்சியினர் சம்பந்தப்படுத்தி குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.