சென்னை – ஒரு காலத்தில் தமிழக அரசியலின் முக்கிய சக்திகளில் ஒன்றாகப் பார்க்கப்பட்ட விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக மீண்டும் எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மையப் புள்ளியாக உருவெடுத்து வருகிறது.
அடுத்தடுத்து, தமிழகத்தின் மூன்று முக்கியப் பிரபலங்கள் விஜயகாந்தைச் சந்தித்ததும், அதற்கு அவரது உடல்நலத்தைக் காரணம் காட்டியதும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் பார்வையை விஜயகாந்தின் பக்கம் திருப்பியிருக்கிறது.
திமுக தலைவர் ஸ்டாலின், தமிழகக் காங்கிரசின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு, நடிகர் ரஜினிகாந்த் என மூன்று பிரபலங்களும் ஓரிரு நாட்களில் அடுத்தடுத்து சந்தித்தது தமிழக அரசியலின் பரபரப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் யாருடன் கூட்டணி என்பதை விரைவில் அறிவிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த்தின் உடல்நலம், கட்சியில் அவரது குடும்பத்தினரின் ஆதிக்கம், கூட்டணி ஏற்கனவே கட்டமைக்கப்பட்டுவிட்டது என்பதால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி, ஆகிய காரணங்களால் விஜய்காந்த் கட்சிக்கான செல்வாக்கு மிகவும் குறைந்து விட்டது எனக் கருதப்படுகிறது.
எனினும், தமிழக அரசியலைப் பொறுத்தவரை அதிமுக, திமுக கூட்டணிகளுக்கிடையில் கடுமையான போட்டி நிலவுவதால், சொற்ப வாக்குகளைக் கொண்டிருந்தாலும் விஜய்காந்தை இணைத்துக் கொள்வது தங்களுக்குப் பலமாக இருக்கும் என இரு அணிகளும் கருதுகின்றன என்பதால் விஜய்காந்திற்கு மீண்டும் தமிழக அரசியலில் முக்கியத்துவம் ஏற்பட்டிருக்கிறது.