புது டில்லி: தீவிரவாதத்திற்கு எதிராக, இந்தியா, பாகிஸ்தான் எல்லைகளில் அதிரடித் தாக்குதல்களை துரிதப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், நேற்று (புதன்கிழமை), துரதிர்ஷ்டவசமாக பாகிஸ்தான் பகுதியில் இந்திய வான்படைக்குச் சொந்தமான விமானங்கள் விழுந்து நொறுங்கியன. அதிலிருந்த நான்கு விமானிகள் மரணமுற்றதாக இந்திய அரசு அறிவித்தது.
இதற்கிடையே, அவற்றை பாகிஸ்தான் இராணுவம் வீழ்த்தியதாக செய்தி வெளியிட்டிருந்தது. ஆயினும், அதனை மறுத்த இந்திய அரசு, அவை தொழில்நுட்பக் காரணங்களால் விழுந்து நொறுங்கின என அறிவித்தது.
பின்னர், அதிர்ச்சியூட்டும் வண்ணம், பாகிஸ்தான் இராணுவத்திடம் இந்திய விமானப்படை விமானி சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது. இதனை உறுதிபடுத்தும் வகையில் பாகிஸ்தான் இராணுவம் காணொளி ஒன்றை வெளியிட்டது. நேற்று காலை மிராஜ் 21 விமானத்தில் சென்ற இந்திய விமானப்படை விமானியான அபிநந்தன் காணாமல் போனார்.
முதற்கட்டத்தில், இந்திய அரசு இது குறித்து எந்த ஒரு செய்தியும் வெளியிடவில்லை, ஆயினும், பாகிஸ்தான் அரசு வெளியிட்ட காணொளிக்குப் பிறகு மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த இக்கட்டான சூழ்நிலைக்குப் பின்னர் இந்திய அரசின் முடிவு என்னவாக இருக்கும் என பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையே, அபிநந்தனை பாகிஸ்தான் இராணுவத்திடமிருந்து மீட்டுக் கொண்டு வருமாறு இந்திய மக்கள் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். #saynotowar எனும் ஹேஸ்டேக் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களால் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. சென்னையில் இருக்கும் அபிநந்தனின், உறவினர் அவரை எப்படியாவது மீட்டுக் கொண்டு வருமாறு இந்திய அரசிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஐநாவில் இந்த விவகாரம் குறித்து முறையிடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.