Home இந்தியா அபிநந்தன் விடுதலை: அடுத்தது என்ன?

அபிநந்தன் விடுதலை: அடுத்தது என்ன?

1266
0
SHARE
Ad

புதுடில்லி – பாகிஸ்தான் சிறைப்பிடித்து வைத்துள்ள இந்திய போர்விமானி அபிநந்தன் நல்லெண்ண அடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்படுவார் என பாகிஸ்தான் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த விமானியை வரவேற்க இந்தியா முழுமையுமே பரபரப்பாகத் தயாராகி வருகிறது.

அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்துலக போர் தொடர்பிலான ஜெனிவா ஒப்பந்தங்களின்படி அவர் விடுவிக்கப்பட வேண்டுமென இந்தியா கடந்த இரண்டு நாட்களாக பாகிஸ்தானுக்குக் கடும் நெருக்கடி கொடுத்து வந்தது.

இதனைத் தொடர்ந்து நல்லெண்ண அடிப்படையிலும், இந்தியாவுடன் அமைதியை ஏற்படுத்தும் முறையிலும் அபிநந்தனை விடுவிக்கப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்தியா முழுவதிலும் ஓரு சிறந்த வீரதீர விமானியாகவும், துணிச்சல் மிக்கவராகவும் அபிநந்தன் கொண்டாடப்படுகிறார். பாகிஸ்தான் சிறைப் பிடித்து வைத்திருந்த நிலையிலும், காயம்பட்டு, கண்கள் கட்டப்பட்டிருந்த இக்கட்டான சூழலிலும், பாகிஸ்தான் இராணுவத்தினர் கேட்ட சில கேள்விகளுக்கு அந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை எனத் துணிச்சலாக அவர் பதிலடி கொடுத்தது, இந்தியர்களைப் பெரிதும் கவர்ந்தது.

அந்தக் காணொளியும் சமூக ஊடகங்களில் வெகுவேகமாகப் பரவி வருகிறது.

இந்தியப் பகுதிக்குள் வந்த பாகிஸ்தான் எஃப்-16 இரக போர் விமானத்தை விரட்டியடிக்க முற்பட்டபோது அபிநந்தன் செலுத்திய போர்விமானம் கீழே விழுந்தது. அந்தக் குறுகிய நேரத்தில் விமானி இருக்கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு உந்தித் தள்ளி வெளியே பறந்த அபிநந்தன் பாகிஸ்தான் நிலப்பகுதியில் விழுந்தார்.

தான் விழுந்தது பாகிஸ்தான் நிலப்பகுதி என்பதை உணர்ந்ததும், உடனடியாக சில இரகசிய ஆவணங்களை வாய்க்குள் விழுங்கினார் என்றும் மேலும் சில ஆவணங்களை அருகிலுள்ள ஏரி ஒன்றில் வீசி எறிந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்பின்னர் அவர் அந்த வட்டாரத்தின் பாகிஸ்தான் பொதுமக்களால் தாக்கப்பட்டு பிடிக்கப்பட்டார். அந்த சமயத்தில் அவரது காலில் பொதுமக்களில் ஒருவர் சுட்டிருக்கிறார். தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் இராணுவத்தினர் வந்து அவரை சிறைப் பிடித்துச் சென்றனர்.

அபிநந்தனின் தந்தையார் வர்த்தாமனும் இந்திய இராணுவத்தின் முன்னாள் போர் விமானியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார்.

இன்று வெள்ளிக்கிழமை இந்தியா-பாகிஸ்தான் இடையிலான வாகா எல்லைப் பகுதிக்கு அபிநந்தன் கொண்டு வரப்படுவார். அதன்பின்னர் இராணுவ முறைப்படி அவர் பாகிஸ்தான் இராணுவத்தினரால் இந்திய இராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்படுவார்.

அவரை வரவேற்க ஏராளமான இந்தியப் பொதுமக்கள் இந்தியக் கொடிகளுடன் வாகா எல்லைப் பகுதியில் குழுமி வருகின்றனர். ஊடகத்தினரும் அணிவகுத்து நிற்கின்றனர். அபிநந்தனை பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் நேரடியாக வரவேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-செல்லியல் தொகுப்பு