Home இந்தியா வீரக் கதாநாயகன் அபிநந்தன் இந்திய மண்ணில் கால் பதித்தார்

வீரக் கதாநாயகன் அபிநந்தன் இந்திய மண்ணில் கால் பதித்தார்

862
0
SHARE
Ad

புதுடில்லி: (மலேசிய நேரம் இரவு 11.55 நிலவரம்) இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வாகா எல்லைப் பகுதிக்குக் கொண்டுவரப்பட்ட, பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த இந்திய போர் விமானி அபிநந்தன் இந்தியாவின் விமானப் படையின் உயர் அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டார்.

வாகா எல்லைப் பகுதியின் பாகிஸ்தான் பகுதியில் குடிநுழைவு நடைமுறைகள் முறையாக மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவர் இந்திய இராணுவ அதிகாரிகளிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டார்.

பஞ்சாப் மாநிலப் பகுதியில் உள்ள வாகா எல்லைப் பகுதியின் இந்திய வளாகமான அட்டாரிக்குக் கொண்டுவரப்பட்ட அபிநந்தன் அதன்பின்னர் மலேசிய நேரப்படி 11.51 மணியளவில் இந்திய மண்ணில் கால் பதித்தார்.

#TamilSchoolmychoice

வாகா எல்லையின் இந்தியப் பகுதியில் பல மணி நேரமாக அபிநந்தனின் வருகைக்காகக் காத்திருந்த பொதுமக்கள் ஆடிப் பாடியும், பட்டாசுகள் வெடித்தும், இசைக் கருவிகள் வாசித்தும் அபிநந்தனின் வருகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

குடிநுழைவு நடைமுறைகளுக்குப் பின்னர் அபிநந்தனுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.

பாகிஸ்தான் எல்லையில் தடுப்புக் கம்பிகளைத் தாண்டி அதிகாரிகளுடன் கம்பீரமாக நடந்து வந்த அபிநந்தன், சற்று நேரம் வாயிலில் நின்றிருந்தார். அதன்பின்னர், அவர் நிமிர்ந்த நடையோடு நடந்து சென்று வாயிலைத் தாண்டி இந்திய மண்ணில் கால் பதித்தார்.

அவரை இந்திய இராணுவத்தினர் கைகுலுக்கி வரவேற்றனர்.

இந்தியா முழுவதிலும் ஓரு சிறந்த வீரதீர விமானியாகவும், துணிச்சல் மிக்கவராகவும் அபிநந்தன் கொண்டாடப்படுகிறார். பாகிஸ்தான் சிறைப் பிடித்து வைத்திருந்த நிலையிலும், காயம்பட்டு, கண்கள் கட்டப்பட்டிருந்த இக்கட்டான சூழலிலும், பாகிஸ்தான் இராணுவத்தினர் கேட்ட சில கேள்விகளுக்கு அந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை எனத் துணிச்சலாக அவர் பதிலடி கொடுத்தது, இந்தியர்களைப் பெரிதும் கவர்ந்தது.

வாகா எல்லைப் பகுதியில் இருந்து அபிநந்தன் விமானத்தின் மூலம் புதுடில்லிக்கு கொண்டுச் செல்லப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.