செமினி – நாட்டில் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் செமினி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 24 மையங்களில் இன்று காலை 8.00 மணிக்குத் தொடங்கியது.
இந்த 24 மையங்களில் 116 வரிசைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
மாலை 5.30 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறும். முன்கூட்டியே வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் ஏற்கனவே தங்களின் வாக்களிப்பை நிறைவேற்றியிருக்கின்றனர்.
53,411 வாக்காளர்களைக் கொண்டுள்ள செமினி சட்டமன்றத்தில் இன்றைய வாக்களிப்பில் 996 பணியாளர்கள் தேர்தல் ஆணையத்தின் சார்பில் சேவையில் ஈடுபடுவர்.
4 முனைப் போட்டியை எதிர்நோக்கியிருக்கும் செமினியில் நேற்று நள்ளிரவுடன் பரப்புரைகள் முடிவடைந்தன. வாக்குகள் எண்ணப்பட்டு இன்றிரவு 10.00 மணிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்து 30 வயது நிரம்பிய அய்மான் சாய்னாலி, தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து 58 வயது சக்காரியா ஹனாபியா மற்றும் பிஎஸ்எம் கட்சியைப் பிரதிநிதித்து, 25 வயது, நிக் அசிஸ் அபிக் அப்துல், ஆகிய மூவரும் செமினி இடைத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களாகப் பார்க்கப்படுகின்றனர்.
சுயேச்சை வேட்பாளராக குவான் சீ ஹெங் போட்டியிடுகிறார்.