கோலாலம்பூர் – 2018 நிதியாண்டின் நாலாவது காலாண்டில் நஷ்டத்தை எதிர்நோக்கிய டிஎன்பி எனப்படும் தேசிய மின்சார வாரியம், தனது பங்குச் சந்தை மதிப்பில் இன்று வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் 1.93 பில்லியன் ரிங்கிட்டை இழந்தது.
31 டிசம்பர் 2018 தேதியோடு முடிவடைந்த நிதியாண்டில் தேசிய மின்சார வாரியம் 134.30 மில்லியன் ரிங்கிட் நஷ்டத்தை எதிர்நோக்கியது. வருமானம் குறைந்தது ஒரு காரணமாகவும், நிதிப் பங்குகள் மீதான செலவினங்கள் அதிகரித்தது மற்றொரு காரணமாகவும் நஷ்டத்துக்கான காரணங்களாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பங்குச் சந்தை மதிப்பீட்டாளர்கள் தேசிய மின்சார வாரியத்தின் மீதான தங்களின் நம்பகத் தன்மையையும் ஆற்றலையும் குறைத்து அறிக்கைகள் விடுத்தனர். இதன் காரணமாக, மின்சார வாரியத்தின் இன்றைய பங்கு விலை 34 காசுகள் குறைந்து 13 ரிங்கிட் 08 காசாக நிலை நிறுத்தப்பட்டது.
இந்த வீழ்ச்சியினால் தேசிய மின்சார வாரியம் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு 74.38 பில்லியன் ரிங்கிட்டாக குறைந்தது.
இந்த மாற்றங்களின் காரணமாக அதன் மொத்த சந்தை மதிப்பில் 1.93 பில்லியன் ரிங்கிட்டை அந்நிறுவனம் இழந்திருக்கிறது.