Home நாடு செமினி : நம்பிக்கைக் கூட்டணியின் தோல்வி – மலாய் வாக்குகள் சரிந்தன! மற்ற காரணங்கள்!

செமினி : நம்பிக்கைக் கூட்டணியின் தோல்வி – மலாய் வாக்குகள் சரிந்தன! மற்ற காரணங்கள்!

1142
0
SHARE
Ad

செமினி – கேமரன் மலை இடைத் தேர்தலின் அபார வெற்றி தேசிய முன்னணி சிறப்பாகக் கட்டமைத்த வியூகங்களின் காரணமாகவே நிகழ்ந்தது – குறிப்பாக, மஇகா வேட்பாளரை நிறுத்தாமல், முதன் முறையாக பூர்வ குடி வேட்பாளரை நிறுத்தியது – போன்ற காரணங்களால் சாத்தியமானது என அரசியல் பார்வையாளர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் அறிவிக்கப்பட்ட செமினி இடைத் தேர்தல் தேசிய முன்னணி மீண்டும் தனது வெற்றியைத் தொடர்ந்து பதிவு செய்ய முடியுமா என்ற கேள்வியை முன்வைத்து இரு தரப்புகளாலும் பரபரப்புடன் எதிர்நோக்கப்பட்டது.

செமினி போன்ற சிலாங்கூர் மாநில சட்டமன்றம் ஒன்றில் தேசிய முன்னணி அடைந்திருக்கும் வெற்றி அந்தக் கூட்டணியின் வட்டாரங்களில் உற்சாக அலைகளை கரைபுரண்டோடச் செய்திருக்கிறது. தேசிய முன்னணியின் சட்டைகளையும் சின்னங்களையும அணிந்து கொண்டு வெளிவர தயங்கியவர்கள், வெட்கப்பட்டவர்கள் இன்று அதே சட்டைகள், சின்னங்களுடன் கம்பீரமாகப் பொது இடங்களில் வெளிவரத் தொடங்கியிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

நம்பிக்கைக் கூட்டணி தோல்விக்கான காரணங்கள் ஏற்கனவே மக்கள் மத்தியிலும், ஊடகங்கள் மத்தியிலும் விவாதிக்கப்படுபவைதான். அவற்றை கீழ்க்காணும் வகையில் வகைப்படுத்தலாம்:-

  • லிம் குவான் எங் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டதால் மலாய் வாக்காளர்களிடையே ஏற்பட்டிருக்கும் அதிருப்தி.
  • அரசாங்கத் தலைமை வழக்கறிஞராக டோமி தோமஸ் நியமிக்கப்பட்டது.
  • பாஸ் கட்சி அம்னோவுக்கு தொடர்ந்து வழங்கி வரும் ஒத்துழைப்பு.
  • வரிசை கட்டி நிற்கும் வழக்குகளால் துவண்டு விடாமல், துணிச்சலுடன் மக்கள் முன்னிலையில் வலம் வந்து வாக்கு கேட்கும் நஜிப் துன் ரசாக்கின் அணுகுமுறை.
  • நம்பிக்கைக் கூட்டணி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காட்டும் தாமதம், தயக்கம். இதனால், மக்களை ஏமாற்றி விட்டார்கள் என அம்னோவினர் செய்து வரும் பிரச்சாரம்.
  • ஒட்டுமொத்தமாக, நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் தங்களின் உரிமைகளும் சலுகைகளும் கட்டம் கட்டமாகப் பறிபோகக் கூடும் என்ற அச்சமும், அபாயமும் மலாய்க்காரர்கள் மத்தியில் ஆழமாக விதைக்கப்பட்டு, அந்த நம்பிக்கைகள் நாளுக்கு நாள் வளர்ந்து வருவது.
  • நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் ஜசெகவின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிறது – அதன்வழியாக சீன சமூகத்தின் ஆதிக்கம் அரசாங்கத்தில் அதிகரித்திருக்கிறது – என மலாய்க்காரர்களிடையே எழுந்திருக்கும் எண்ணங்கள்.

இவ்வாறாக, மேற்கூறப்பட்ட காரணங்களின் பிரதிபலிப்புதான் செமினியிலும் நம்பிக்கைக் கூட்டணி அடைந்த தோல்வி.

semenyih-byelection-results

அதற்கேற்ப, மலாய் வாக்காளர்களின் ஆதரவில் 37.73 விழுக்காடு மட்டுமே நம்பிக்கைக் கூட்டணி பக்கம் சாய்ந்திருக்கிறது என்றும் ஆனால் 14-வது பொதுத் தேர்தலில் 44.25 விழுக்காடு மலாய் ஆதரவை இதே நம்பிக்கைக் கூட்டணி பெற்றது என்றும் முதல் கட்ட தேர்தல் முடிவு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், 14-வது பொதுத் தேர்தலில் 35.33 விழுக்காடு மலாய் ஆதரவைப் பெற்ற தேசிய முன்னணி இந்த இடைத் தேர்தலில் 59 விழுக்காடு மலாய் ஆதரவைப் பெற்றது என்றும் அதன் காரணமாகவே செமினியில் வாகை சூடியது என்றும் ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

அடுத்து வரும் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலிலும், இதே போன்ற நிலைமை தொடரலாம்.

14-வது பொதுத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றி சுமார் ஒன்பது மாதங்களுக்குள்ளாக இத்தகைய அரசியல் வானிலை மாற்றங்கள் நிகழும் என நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்கள் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இந்த அரசியல் மாற்றங்களை எதிர்கொண்டு, நம்பிக்கைக் கூட்டணியினர் எவ்வாறு சீர்திருத்தங்களை விரைவுபடுத்தப் போகிறார்கள் – தங்களின் அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ளப் போகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் – அடுத்து வரும் இடைத் தேர்தல்களின் முடிவுகள் அமையும்.

-இரா.முத்தரசன்