புது டில்லி: தமிழகத்தைச் சேர்ந்த சவுமியா சுவாமிநாதன் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இந்திய நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானியும் பசுமை புரட்சியின் தந்தை எனக் குறிப்பிடப்படும் எம்.எஸ். சுவாமிநாதனின் மகளாவார்.
இந்திய நாட்டில் 1960-ஆம் ஆண்டுகளில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. அக்காலத்தில், அமெரிக்காவிலிருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. இந்திய நாட்டு மக்கள், இனி பசியின் காரணமாக ஆயிரக்கணக்கில் உயிரிழக்கப்போகிறார்கள் என உலக நாடுகள் கருதின. அதனை, எதிர்கொள்ள, எம்.எஸ். சுவாமிநாதன், ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்தார். பெரிய அளவிலான இலாபத்தை இதன் மூலமாக இந்தியா கண்டது.
மேலும், நாட்டின் முதுகெலும்பான வேளாண் துறையில் பெரிய அளவிலான வளர்ச்சியை ஏற்படுத்தி உலக அரங்கில் இந்தியாவை தலை நிமிரச் செய்தவர்.
சவுமியா சுவாமிநாதன், காசநோய் ஆராய்ச்சியாளர். இவர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக பணியாற்றியவர். உலக சுகாதார அமைப்பின் திட்டங்களுக்கான துணை இயக்குநராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். தற்போது, பதவி உயர்வு அளிக்கப்பட்டு அந்த அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக பொறுப்பேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.