Home நாடு அடையாள ஆவண சிக்கல் : தீர்வு காண்பதில் நம்பிக்கைக் கூட்டணி அரசு தீவிரம் – வேதமூர்த்தி

அடையாள ஆவண சிக்கல் : தீர்வு காண்பதில் நம்பிக்கைக் கூட்டணி அரசு தீவிரம் – வேதமூர்த்தி

1465
0
SHARE
Ad

புத்ராஜெயா – “மலேசியக் குடியுரிமை பெறும் விவகாரத்தில் 61 ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் அடையாள ஆவணச் சிக்கலுக்கு புதிய ஆட்சியில் ‘துரித உணவை’ப் போல உடனடித் தீர்வு என்பது நடைமுறை சாத்தியமற்றது. ஆனாலும், இதன் தொடர்பான நடவடிக்கை ஓரளவுக்கு நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இது குறித்த விரிவான அறிக்கை கூடிய விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது” என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகமானோர் எதிர்கொண்டுள்ள அடையாள ஆவணச் சிக்கலைக் களைவதற்கான முயற்சியில் நம்பிக்கைக் கூட்டணி அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அடையாள ஆவணப் பிரச்சினை என்று பொதுவாக கூறப்பட்டாலும் இதில் எண்ணற்ற பிரிவுகள் அடங்கியுள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது. அதைப்போல, ஒவ்வொருவரின் ஆவணப் பிரச்சினையும் தனித்தனி சட்ட சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

நம்பிக்கைக் கூட்டணி அரசு, தன்னுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளபடி அடையாள ஆவண சிக்கலைக் களைவதற்காக பேரளவில் முயற்சி மேற்கொள்கிறது. அதன் தொடர்பில் தேசிய சட்டத் துறை அலுவலகத்திலும் வழக்கறிஞர்களிடத்திலும் உரிய ஆலோசனை பெறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தீபகற்ப மலேசியாவில் அதிகமான இந்தியர்களும் சபா, சரவாக்கில் மற்ற இனத்தவரும் இந்த அடையாள ஆவணப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென் பிலிப்பைன்ஸில் இருந்து சபாவிற்கு குடிபெயர்ந்த பல்லாயிரக் கணக்கானோர், அதைப்போல எல்லை கடந்து சரவாக்கை தஞ்சமடைந்த ஆயிரக் கணக்கானோர்  குடியுரிமை அற்ற நிலையில் தொடர்கின்றனர். மியான்மார் மக்கள் எதிர்கொள்ளும் குடியுரிமைச் சிக்கலும் இதில் அணி சேர்ந்துள்ளது.

மருத்துவ வசதி, சிறார்களுக்கான கல்வி வாய்ப்பு, வர்த்தக நடவடிக்கை, வீட்டுடைமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் தடைபடும் இந்த அடையாள ஆவணச் சிக்கலால் ஏறக்குறைய 3 இலட்ச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டாலும், இதில் பல்வேறு பிரிவுகள் அடங்கியுள்ளன.

இப்படிப்பட்டவர்கள் நீண்ட காலமாகவே இத்தகைய நடைமுறைச் சிக்கலுடன் இந்த நாட்டிலேயே நிலைபெற்றுள்ளனர். தவிர, வேறு நாடுகளின் குடியுரிமையையும் இவர்கள் கொண்டிருக்கவில்லை. அதனால், சட்ட சிக்கல் இருந்தாலும் இந்த மக்களுக்கு நியாயமான, பொருத்தமான தீர்வை மனிதாபிமான அடிப்படையில் அளிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கைக் கூட்டணி அரசு கடப்பாடு கொண்டுள்ளது. அதற்கான, தொடர் நடவடிக்கையிலும் முனைப்பு காட்டி வருகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, பிரதமர் துன் மகாதீரும் இந்த விவகாரத்தில் அதிக அக்கறைக் கொண்டுள்ளதால் கூடிய விரைவில் அடையாள ஆவண சிக்கலுக்கு தேசிய அளவில் ஒரு நல்லத் தீர்வு எட்டப்படும். இப்படியெல்லாம் தொடர் நடவடிக்கைகள் புதிய அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், சமூகத்தில் நேர்மாறான வகையில் கருத்துகள் பிரதிபலிக்கின்றன.

மேற்கண்டவாறு அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கும் வேதமூர்த்தி “என்னைப் பொறுத்தவரை எதையும் நிறைவேற்றியபின் சொல்வதுதான் வழக்கம். அதுதான் என்னுடைய பாணி” என்றும் குறிப்பிட்டுள்ளார்.