Home நாடு தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர் மன்ற அறிக்கைகள் – கண்டனங்கள் ஏன்? – நவீன் விளக்கம்

தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர் மன்ற அறிக்கைகள் – கண்டனங்கள் ஏன்? – நவீன் விளக்கம்

2133
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எழுத்தாளரும், வல்லினம் இணைய இதழ் ஆசிரியருமான ம.நவீன் அண்மையில் தனது வலைத்தளத்தில் (vallinam.com.my/navin) தலைமையாசிரியர் மன்றம் நடத்தும் தமிழ் விழா தொடர்பாக எழுதியிருந்த பதிவு சமூக ஊடகங்களில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

அவரது பதிவு குறித்தும், அதில் இடம் பெற்ற அம்சங்கள் குறித்தும், சாதகமான கருத்துகள் வெளிவருவது போல், சில சாடல்களும், சில எதிர்ப்பான கருத்துகளும் வெளிப்படுத்தப்பட்டன.

எனவே, எழுந்திருக்கும் சர்ச்சைகள் தொடர்பில் ம.நவீனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். அந்தக் கேள்விகளும் அதற்கான அவரது பதில்களும் தொடர்கின்றன:

#TamilSchoolmychoice

செல்லியல்: சமீபத்தில் மலேசியத் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் மன்றம் தொடர்பாக நீங்கள் கூறிய கருத்து பெரும் சர்ச்சையாகி உள்ளது. மொழி விழாவுக்கான அறிக்கையை மலாய் மொழியில் வெளியிட்டதில் நீங்கள் முரண் பட்டுள்ளதாக அறிகிறோம். இந்த அறிக்கையில் தமிழைச் சேர்க்காதது மட்டும்தான் உங்கள் சிக்கலா?

ம.நவீன்: இல்லை. அப்படி எளிமைப்படுத்தப் பார்க்கிறார்கள். நான் அவ்வறிக்கை தொடர்பாக மூன்று விடயங்களை முன்வைத்துள்ளேன். அதில் முதலாவது தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டி அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும் என்பது. வங்கி, மருத்துவமனை போன்ற பொது இடங்களில் நாம் தமிழில் அறிவிப்புகள் இல்லையென்றால் கவலையடைகிறோம். கோஷமிடுகிறோம்.

தமிழ்ப்பள்ளியில் தமிழை வளர்க்கும் விழாவில் ஏன் தமிழ் மொழியைப் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் என் அடிப்படையான கேள்வி. இவ்வறிக்கை அரசால் தயாரிக்கப்பட்டிருந்தால் அது அதிகாரத்துவ மொழி என்பதன் நியாயம் எனக்குப் புரிகிறது. தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றம் இதனை முன்னின்று நடத்துகிறது. ஆங்கில மொழி கதை சொல்லும் போட்டிக்கு ஆங்கிலத்தில் அறிவிப்புகளைத் தயாரிக்க முடியும்போது திருக்குறள், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி போன்ற தமிழ் அங்கங்களுக்கு மலாய்மொழியில் ஏன் தயாரிக்க வேண்டும்?

செல்லியல்: அப்படியானால் தமிழ் மொழியில் இவ்வறிக்கை மாற்றப்படுவதுதான் உங்கள் இறுதியான நோக்கம் என எடுத்துக்கொள்ளலாமா?

ம.நவீன்: இல்லை. பேச்சுப்போட்டியில் வழங்கப்பட்டுள்ள தலைப்புகளிலும் முரண்பாடு உண்டு. முதலாவது பொதுவாக ‘மொழி’ என தலைப்பு வழங்கியுள்ளனர். ஓர் ஆசிரியர் தன் மாணவனுக்கு ‘சமஸ்கிருத மொழியின் மேன்மை’ என்றும் ‘லத்தின் மொழியின் சிறப்பு’ என்றும் உரை தயாரித்து வழங்கினால் நடுவராக வருபவரால் அதில் உள்ள கருத்துக்கு புள்ளிகள் இட இயலுமா?

அம்மாணவன் சொன்ன கருத்துகள் சரியா தவறா என எப்படி அந்தக் குறுகிய நேரத்தில் சோதிப்பார்கள்? அதேபோல இந்திய பண்பாடு எனத் தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்படி ஒன்று உள்ளதா என்ன? இந்திய நிலபரப்பில் வாழ்பவர்கள் இந்தியர்கள். அப்படி இந்திய நிலத்தில் வாழும் ‘பிகாரி’ இனத்தைப் பற்றியும் அவர்கள் பண்பாடு பற்றியும் ஒரு மாணவன் உரையாற்றினால் இவர்களால் புள்ளிகள் வழங்க இயலுமா? அம்மாணவன் சொல்லும் கருத்து சரியா தவறா என அறிய மேல் ஆய்வுகளும் அதை ஒட்டியப் புரிதலும் நடுவருக்குத் தேவை அல்லவா? அதை அங்கே பெற சாத்தியமா? இப்போது பாதிக்கப்படுவது அதுபோன்ற தலைப்பில் உரையாற்றிய மாணவன். அவன் உரை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் நீதிபதிகளின் முன்னறிவுக்கு ஏற்பவே புள்ளிகள் கிடைக்கின்றன.

செல்லியல்: அப்படியானால் நீதிபதிகள் போதாமை உடையவர்கள் என்கிறீர்களா?

ம.நவீன்: நாம் அனைவருமே போதாமை கொண்டவர்கள்தானே. எல்லாருக்கும் எல்லாமே தெரியாது அல்லவா?

அதுவும் விரைந்து புள்ளிகள் கொடுக்க வேண்டிய சூழலில் உள்ள நீதிபதிகளால் சொல்லப்பட்ட கருத்துகளை எவ்வாறு மதிப்பிட முடியும்? ஆனால் இத்தலைப்புகள் ‘தமிழ் மொழி’ , ‘தமிழ்ப்பண்பாடு’ என மையப்படுத்தப்பட்டால் நடுவர் தன்னை எல்லா நிலைகளிலும் தயார் செய்துக்கொண்டு வருவார். மாணவன் தன் உரையில் சொல்லும் கருத்து சரியா என அவரால் அறிய முடியும். யாரோ செய்யும் தவறுக்கு ஏன் நீதிபதிகள் பலியாக வேண்டும்? ஏன் ஆசிரியர்கள் அவர்களை குறை சொல்ல வேண்டும்?

ஏன் தங்கள் உரிமையைக் கேட்ட குரலற்ற மாணவர்களை வறுத்தி பயிற்றுவித்து நமது போதாமையால் அவனை தோல்வியடைந்தவன் எனச் சொல்லி முத்திரை குத்த வேண்டும்? ஒவ்வொரு ஆசிரியரும் தன் மாணவனை தயார் செய்ய எவ்வளவு உழைக்கிறார். திட்டவட்டமான தலைப்பில்லாமல் ஒவ்வொரு முறையும் அவர்கள் உழைப்பு அவசியம் இன்றி பாழ்படுவது எப்படி சரியாகும?

செல்லியல்: இப்பேச்சுப்போட்டி அறிக்கையில் ஆதி.குமணன் பெயரை தமிழை வளர்த்த ஆன்றோர்கள் பட்டியலில் இணைத்ததை ஏன் மறுக்கிறீர்கள்?

ம.நவீன்: ஆம் அது மூன்றாவது தலைப்பு. எனக்கு அவர் மேல் நிறைய மரியாதை உண்டு. மலேசிய தமிழ் நாளிதழ் ஆசிரியர்களுக்குப் பெருமை சேர்த்தவர். மக்கள் கார் நிதி, குஜராத் பூகம்ப நிதி என ஏற்படுத்தியவர். தமிழ்ச்சமூகத்தின் மேல் அவர் அக்கறை காட்டினார் என்பது உண்மை. ஆனால் மொழி வளர்ச்சிக்காக இந்நாட்டில் காலம் முழுவதும் உழைத்தவர்கள் உள்ளனர். குறிஞ்சி குமரனார், அ.பு.திருமாலனார், மணிவெள்ளையனார், சீனி.நைனா முகம்மது என மொழியை மையப்படுத்தி வாழ்ந்தனர். ஆதி.குமணன் சமூகப் போராளி. அவர் பல தளங்களில் செயல்பட்டார். அவரது அடிப்படையான அடையாளம் நாளிதழ் ஆசிரியர் என்பதே. மற்றபடி அவர் தனியாக மொழி ஆய்விலோ, அதை வளர்த்தெடுக்கும் செயல்திட்டங்களோ அமைத்ததாக சான்றுகள் இல்லை. நான் தரவுகள் அடிப்படையில் இதை சொல்கிறேன். மற்றபடி நான் அவரை மரியாதை குறைவாகப் பேசவில்லை. வரலாற்று இழுக்கு வரக்கூடாது என மட்டுமே அஞ்சுகிறேன்.

செல்லியல்: இதை நீங்கள் நேரடியாகவே சம்பந்தப்பட்டவர்களிடம் பேசியிருக்கலாமே.

ம.நவீன்: ஒரு தவறு என்பது வேறு; அலட்சியம் என்பது வேறு. இந்த அறிக்கை அப்படியே கடந்த ஆண்டில் தயாரானது. அப்போது பலரும் தங்கள் அதிருப்தியை கூறினர். மீண்டும் மறு ஆண்டு அமுல்படுத்துகையில் முந்தைய தவற்றை இவ்வாண்டில் களைந்திருக்க வேண்டும். ஆனால் மீண்டும் அலட்சியப்போக்கு நடந்துள்ளது. ஒருவேளை நான் தனிப்பட்ட முறையில் இதை சொல்லும்போது அடுத்த ஆண்டு திருத்தியமைக்கப் படலாம்.

நான் சமகால சிக்கலை மையப்படுத்தி மட்டும் பேச விரும்பவில்லை. வருங்காலத்திலும் இதுபோன்ற தமிழ்மொழிக்கு அலட்சியங்கள் நடக்காமல் இருக்க அவ்வப்போது அதற்கான எதிர்ப்புக்குரல் இருக்கும் என்பதைக் காட்ட வேண்டியுள்ளது.

செல்லியல்: ஆசிரியர்கள் மத்தியில் இதுகுறித்து பெரும் எதிர்ப்பு வந்ததாக தெரியவில்லை.

ம.நவீன்: யாரும் யாரையும் எதிர்க்க வேண்டியதில்லை. மேலும் இது ஆசிரியர் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. தங்கள் பிள்ளைகளை போட்டிக்கு அனுப்பும் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்திடம் இதுகுறித்து உறுதியாகக் கேட்டு தெளிவடைய வேண்டும். அதற்கான முழு உரிமை அவர்களுக்கு உண்டு. இப்படி ஒரு சிக்கல் இருப்பதை பொதுவுக்கு கொண்டு வருவதே என் நோக்கம். அதன் வழி சமூகத்தின் பல்வேறு அமைப்புகளை விழிப்புடன் இருக்கச் சொல்கிறேன். மொழி அழிந்தால் இனம் அழியும். அது தெரிந்தபின் அது குறித்த கவனத்துடன் செயல்படுவது அந்தந்த பள்ளிகளின் அக்கறை சார்ந்தது. இதை நான் தனிப்பட்ட முறையில் அமைதியாக அணுகியிருக்கலாம். ஆனால் மீண்டும் வேறொரு தரப்பு இதே போன்ற அலட்சியத்தை காட்டும். இனி இந்தச் சிக்கலை நிபுணத்துவத்துடன் அந்தப் பள்ளி நிர்வாகமே கையாள வேண்டும். அப்படி காட்டவில்லையென்றால் நான் செய்ய ஒன்றும் இல்லை.

செல்லியல்: ஒரு தரப்பினர் கல்விச் சூழலில் நடக்கும் தவறுகளை வெளியில் உள்ளவர்கள் தலையிடுவது அநாகரீகம் என்கின்றனர். தலைமை ஆசிரியர்களே இந்தச் சிக்கலை பேசி சரிபடுத்திவிடுவார்களே….

ம.நவீன் : அடிப்படையில் நான் ஒரு படைப்பாளி. அதுவும் ஒரு சிறுபான்மை இனத்தின் படைப்பாளி. இந்தச் சமூகத்தில் என் தேவை என்ன என்று நான் அறிந்து வைத்திருக்கிறேன். எங்கே குரல் நசிந்தவர்கள் அவர்கள் அறியாமல் தண்டிக்கப்படுகிறார்களோ அங்கே சிறுபான்மை இனத்தின் படைப்பாளியின் குரல் ஒலிக்க வேண்டும். மாணவர்கள் மொத்தக் கல்விச்சூழலில் குரல் நசுக்கப்பட்டவர்கள். தாங்கள் ஏமாற்றப்படுவதை அவர்களால் அறிய முடியாது. இந்த முறையாக வரையறைக்கப்படாத போட்டி முறையால் கடும் உழைப்புக்கு ஆளாகும் மாணவர்கள் காரணமின்றி தோல்வியடைகின்றனர். ஒரு மாணவனின் வெற்றி தோல்வியை உழைப்பு தீர்மானிக்க வேண்டுமே தவிர அதிகாரத்தில் உள்ளவர்களின் அலட்சியம் அல்ல.

செல்லியல்: இதனால் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கும் நிர்வாகத்திற்கும் பிணக்கு வராதா?

ம.நவீன்: சிலர் அப்படி சிண்டு முடித்துவிட முயலலாம். தலைமை ஆசிரியர்களுக்கு ஆசிரியர்களுக்கு நடக்கும் சிக்கல் அல்ல இது. மொழியின் மீதும் மாணவர்கள் மீதும் அக்கறை கொண்ட அனைத்து தரப்பும் ஒன்றிணைந்து நம்முன் நம் மொழிக்கு நடக்கும் அவலத்தை கண்டிக்க வேண்டும். அக்கறை கொண்ட தலைமையாசிரியர்கள் இருப்பதால்தான் இன்றும் நம் நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் நிலைக்கின்றன. எனவே அவர்களை குறை சொல்வது தகாத ஒன்று. நான் ஒரு சில கருத்தாக்கத்திற்கு எதிராக பேசுகிறோம். அதில் மட்டுமே முரண் பட்டிருக்கிறோம். ஒற்றுமையை இழந்துவிட்டு எந்த மாற்றமும் சாத்தியம் இல்லை. இது போராட்டமெல்லாம் இல்லை. விழிப்புணர்வின் குரல் என எடுத்துக்கொள்ளலாம். இந்த விழிப்புணர்வை தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் இணைந்தே ஏற்படுத்த வேண்டும்.

-செல்லியல் தொகுப்பு