ஏப்ரல் 2 – கடந்த மார்ச் 25ஆம் தேதி நிகழ்ந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற பிரதமருக்கும் ஹிண்ட்ராப்புக்கும் இடையிலான முதலாவது சந்திப்புக்குப் பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது.
ஆனால் இதுவரை ஹிண்ட்ராப் முன்மொழிந்துள்ள திட்டவரைவுக்கு எந்தவித தீர்வும் வழங்கப்படவில்லை.
தற்போது ஹிண்ட்ராப்பின் தேசிய ஆலோசகர் என்.கணேசன், ஹிண்ட்ராப் பிரதமருடன் நடத்தவிருக்கும் இரண்டாவது சந்திப்பு குறித்து விளக்கமளித்துள்ளார்.
இன்று மலேசியாகினி இணையத் தளத்திற்கு தெரிவித்த செய்தியொன்றில் தாங்கள் 24 அம்ச திட்டத்தை பிரதமரிடம் முன்மொழிந்துள்ளதாகவும், இது குறித்து விவாதிக்க இரண்டாவது சந்திப்பு ஒன்றுக்கு தாங்கள் காத்திருப்பதாகவும் கணேசன் கூறியுள்ளார்.
ஆனால் அந்த அம்சங்கள் என்ன என்பது குறித்து கணேசன் விளக்கவில்லை.
இந்த முறை சந்திப்பின்போது மிகவும் சர்ச்சைக்குரிய அம்சங்கள் மீது கருத்துப் பரிமாற்றங்கள் நிகழும் என தாங்கள்எதிர்பார்ப்பதாகவும் கணேசன் கூறியுள்ளார்.
முதலாவது சந்திப்பின் போது எழுப்பப்பட்ட விவாதங்கள் மிகவும் சர்ச்சைக்குரியவையாக இருந்த காரணத்தால் இரண்டாவது சந்திப்பை ஏற்பாடு செய்வதற்கு கால தாமதம் ஆகிறது என தான் கருதுவதாகவும் காரணம் இந்த முறை பிரதமரைத் தவிர்த்து மேலும் அதிகமானவர்கள் சந்திப்பில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் கணேசன் கூறியுள்ளார்.
இருப்பினும் இந்த வாரத்திற்குள் பிரதமருடனான சந்திப்பு ஏற்பாடு செய்யப்படும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் கணேசன் கூறியுள்ளார்.
பிரதமருடனான தங்களின் முதல் சந்திப்பு பயனுள்ளதாக இருந்தாலும் தீர்வுகள் எதுவும் காணப்படவில்லை என்றும் கணேசன் கூறியுள்ளார்.