
ஜோகூர் பாரு: பாசிர் கூடாங்கில் ஏற்பட்ட இரசாயன மாசுபாடு காரணமாக, முதல் நாள் அன்றே அவசர நிலை அறிவித்திருக்க வேண்டும் என துன்கு மக்கோத்தா ஜோகூர் துங்கு இஸ்மாயில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது கட்டுபாட்டில் இருக்கிறது என அரசாங்கம் கூறி வரும் வேளையில் இந்த நச்சுக் காற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.
“இரண்டாயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளார்கள், ஆனால் அவசர நிலை அறிவிக்கப்படவில்லை, ஆச்சரியம்!” என துங்கு தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்தின் முதல் நாளே அப்பகுதி மக்களை வேறு இடத்திற்கு இடமாற்றிருக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, தற்போதைக்கு இந்த சம்பவம் குறித்து அவசர நிலை எதுவும் அரசாங்கம் அறிவிக்காது என பிரதமர் மகாதீர் நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.
தற்போதைய நிலவரம்படி, பரவியுள்ள காற்றின் தூய்மைக் கேட்டினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, இரண்டாயிரத்திலிருந்து 3, 555 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இது சம்பந்தமாக 31 புகார்கள் காவல் துறையில் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்திற்குக் காரணமாவர்களை இன்னும் காவல் துறை கைது செய்யவில்லை எனவும் காவல் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.