கிள்ளான்: பாசிர் கூடாங் நச்சுக் காற்று சம்பவத்திலிருந்து நாடு மீளாத நிலையில், கிள்ளான் ஆற்றிலும் இரசாயனப் பொருட்கள் கொட்டப்பட்டு ஆறு மாசடைந்துள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொறுப்பற்ற நபர்களால் நேற்று வியாழக்கிழமை இந்தப் பொருட்கள் கொட்டப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய, சிலாங்கூர் நீர் கட்டுபாடு ஆணைய (லுவாஸ்) இயக்குனர் டத்தோ ஹாசிம் ஒஸ்மான், கிள்ளானில் அமைந்திருக்கும் தாமான் ஹெங் அன் அருகே உள்ள ஆற்றுப் பகுதி பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்தார். நேற்று மாலை 6.00 மணியளவில் பொதுமக்கள் லுவாஸில் இது குறித்து புகார் செய்ததால் இந்த விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டது என அவர் கூறினார்.
“இரசாயன பொருளின் மாதிரிகள் எடுக்கப்பட்டுவிட்டது. உடனடியாக அதனை சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது” என அவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து சிலாங்கூர் மாநில சுற்றுச்சூழல் இலாகா மற்றும் கிள்ளான் மாநகர மன்றத்திற்கும் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார். இது குறித்துப் பேசிய சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷா, கிள்ளான் ஆற்று நீரை சுத்திகரிப்பு செய்யும் வேலைகள் இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைந்து விடும் எனக் குறிப்பிட்டார். இம்மாதிரியான பொறுப்பற்ற செயலைச் செய்யக்கூடியவர்கள், அவர்களது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுமாறு அவர் எச்சரித்தார்.