ஜோர்ஜ் டவுன்: பினாங்கில் மச்சாங் புபோக் பகுதியில் சட்டவிரோதமான முறையில் நெகிழி வகை பொருட்கள் மற்றும் இதர திடமான கழிவுப்பொருட்களை கொட்டும் இடத்தினை மாநில நடவடிக்கைக் குழு கண்டறிந்துள்ளது என ஸ்டார் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆறு காற்பந்தாட்ட திடல் அளவைக் கொண்டிருக்கும் அப்பகுதியில், நெகிழிகள், தளபாடங்கள் மற்றும் கட்டுமான கழிவுகள் ஆகியவை சட்டவிரோதமாக கொட்டப்பட்டிருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளது.
அங்குள்ள கழிவுப்பொருட்கள் திறந்த வெளியில் எரிக்கப்படுவதும், பரவலாகக் காணப்பட்டதாக செய்தி தெரிவித்துள்ளது.
அப்பகுதியில் கழிவுப் பொருட்களைக் கொட்டும் அனுமதி இல்லை என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செபெராங் பெராய் நகராட்சித் தலைவர் ரொசாலி முகமட் தெரிவித்தார்.
ஜோகூரில் நடந்த கிம் கிம் ஆற்று விவகாரம் இது போன்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என அவர் கூறினார்.
செபெராங் பெராய் நகராட்சி நடவடிக்கைக் குழு, சம்பந்தப்பட்ட இடத்தைப் பார்வையிட்டுள்ளதாகவும், இன்று புதன்கிழமை அவ்விடத்திற்கு அரசாங்க துறைகளுடன் மீண்டும் செல்ல இருப்பதாகவும் அவர் கூறினார்.