Home நாடு கிம் கிம் ஆறு தூய்மைக் கேடு : மூவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்

கிம் கிம் ஆறு தூய்மைக் கேடு : மூவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்

863
0
SHARE
Ad

ஜோகூர் பாரு : பாசிர் கூடாங் கிம் கிம் ஆற்றில் அபாயகரமான இராசயனக் கழிவுகளைக் கொட்டியதற்காக மூவர் இங்குள்ள அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களில் இருவர் கார் சக்கரங்களை மறுசுழற்சி செய்யும் நிறுவனத்தின் இயக்குநர்களாவர். மற்றொருவர் ஒரு லோரி ஓட்டுநராவார்.

அவர்களில் 34 வயதான வாங் ஜின் சாவ் சிங்கப்பூரியராவார். 36 வயது யாப் யோக் லியாங் மலேசியராவார். 35 வயது லோரி ஓட்டுநர் என்.மரியதாஸ் என்ற பெயர் கொண்டவராவார்.

சட்டவிரோதமாக அந்தக் கழிவுகளைக் கொட்டியதற்காக மரியதாஸ் மீது குற்றம் சாட்டப்பட்ட வேளையில் அவருடன் சதியாலோசனையில் ஈடுபட்டதாக அந்த இரு இயக்குநர்களும் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

1974-ஆம் ஆண்டின் சுற்றுச் சூழல் தரச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 5 லட்சம் ரிங்கிட் வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

லோரி ஓட்டுநர் மரியதாசுக்கு 1 இலட்சம் ரிங்கிட் பிணைப் பணம் (ஜாமீன்) நிர்ணயிக்கப்பட்டது. இயக்குநர் யாப்பிற்கு 250,000 ரிங்கிட் பிணை நிர்ணயிக்கப்பட்டது.

சிங்கப்பூரியரான வாங்கிற்கு பிணை வழங்கப்படவில்லை. அவரது அனைத்துலகக் கடப்பிதழும் பறிமுதல் செய்யப்பட்டது.

பிணைத் தொகையை செலுத்தாத காரணத்தால் அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

மேலும் சம்பந்தப்பட்ட அந்த நிறுவனம் மீது சுற்றுச் சூழல் சட்டடங்களின் கீழ் 15 குற்றங்களைப் புரிந்ததற்காக 60 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.