கோலாலம்பூர்: நாடற்ற நிலையில் இதுநாள் வரையிலும் அவதியுற்று வந்த எஸ்டிபிஎமின் சிறந்த மாணவியான, ரோய்சா அப்துல்லாவுக்கு, இன்று வியாழக்கிழமை அடையாள ஆவணம் வழங்கப்பட்டது. கடந்த ஆறு வருடங்களாக அவர் இந்தப் பிரச்சனையில் சிக்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் சுரைடா கமாருடின் மற்றும் ஆசிரியர்களின் உதவியால், அவருக்கு அரசாங்கம், இன்று முறையான பிறப்பு சான்றிதழையும், அடையாள ஆவணத்தையும் ஒப்படைத்தது.
பிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையின்றி, ரோய்சா தனது எஸ்டிபிஎம் தேர்வுக்குப் பின்னர் உள்ளூர் பொதுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க முடியாமல் போனது.
கிள்ளானில் உள்ள மருந்தகம் ஒன்றில் பெயர் தெரியாத பெற்றோர்களுக்குப் பிறந்த ரோய்சாவை, மலேசிய தம்பதிகள் பெற்றுக் கொண்டனர். கடந்த 2014-ஆம் ஆண்டு ரோய்சாவின் வளர்ப்புத் தாய் மரணம் அடைந்தார்.
சட்டப்பூர்வப் பாதுகாவலர் இல்லாததால், அவர் இந்நிலைக்கு தள்ளப்பட்டார்.