வாஷிங்டன்: கடந்த மாதம் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதத் தாக்குதலை மேற்கொண்ட ஜய்ஷ்-இ-முகமட் அமைப்பை முடக்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் தீவிரம் காட்டுவதாக இல்லை என்பதால், அந்த அமைப்பு மற்றும் அதன் தலைவரான மசூத் அசாரை கருப்பு பட்டியலில் சேர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகள் வரைவு தீர்மானத்தை ஐ.நாவுக்கு அனுப்பியுள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஜய்ஷ்–இ–முகமட் மற்றும் அதன் தலைவரை கருப்பு பட்டியலில் சேர்பதற்கு சீன முக்கியத் தடையாக இருந்து வந்துள்ளது.
மசூத் அசாருக்கு எதிராக உலக நாடுகளுடன் ஆயுத விற்பனை செய்ய அதிகாரப்பூர்வ தடை விதிக்கப்பட வேண்டும் என்றும், அவன் அனைத்துலக பயணங்களை மேற்கொள்வதிலிருந்து தடை விதிக்கப்பட வேண்டும் எனவும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவனது சொத்துக்களை முடக்கவும் இம்மூன்று நாடுகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும், ஜய்ஷ்–இ-முகமட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.