சென்னை – வேலூர் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் இல்லத்தில் நேற்று இரவு வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் அதிரடி சோதனை நடத்தியது குறித்து அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது அரசியல் மிரட்டல் என பல தரப்புகளும் கண்டித்துள்ளனர். மேற்கு வங்காள ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் இந்த சோதனை குறித்து கண்டனம் தெரிவித்தன.
ஆரம்பத்தில் துரைமுருகன் இல்லத்தில் நடைபெற்ற சோதனைக்கு திமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், சுமார் 4 மணி நேரத்திற்குப் பின்னர் சோதனையைத் தொடக்கிய அதிகாரிகள் 10 இலட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பின்னர் அறிவித்தனர்.
துரைமுருகனின் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
மேலும், அவரது மகனும் தி.மு.க. சார்பில் வேலூர் மக்களவை தொகுதியின் வேட்பாளராக போட்டியிடும் கதிர் ஆனந்துக்கு சொந்தமான காட்பாடி கிருஸ்தியான்பேட்டையில் உள்ள கல்லூரி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.