கோலாலம்பூர்: 28,000 ரிங்கிட் பெறுமானமுள்ள கைக்கடிகாரத்தை கையூட்டாகப் பெற்றதன் காரணமாக விவசாயம், விவசாயம் சார்ந்த தொழிலியல் அமைச்சர், சாலேஹுடின் அயூப்பின் அரசியல் செயலாளர் நேற்று திங்கட்கிழமை ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார்.
47 வயது நிரம்பிய அந்த ஆடவர் எம்ஏசிசி தலைமையகத்தில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேம்பாட்டாளர் ஒருவரிடமிருந்து அந்த ஆடம்பரக் கைக்கடிகாரத்தை அவர் பெற்றதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து அமைச்சரிடம் வினவிய போது, தாம் இந்த விவகாரத்தில் குறுக்கிடப்போவதில்லை எனவும், அவரும் சாதாரண மலேசியர் எனும் பட்சத்தில், சட்டத்திற்கு உட்பட்டு அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அந்த ஆடவர் இன்று செவ்வாய்க்கிழமை புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்படுவார் எனக் கூறப்படுகிறது.