கோலாலம்பூர்: நேற்று புதன்கிழமை தொடங்கப்பட்ட முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் 42 மில்லியன் ரிங்கிட் தொடர்பான வழக்கு விசாரணையில், நஜிப் தரப்பு தலைமை வழக்கறிஞரான முகமட் ஷாபி அப்துல்லா, அரசாங்கத் தலைமை வழக்கறிஞரின் தொடக்க உரையை விமர்சித்துள்ளார்.
“அரசாங்க தலைமை வழக்கறிஞரின் தொடக்க அறிக்கையின் மீது நாங்கள் தீவிரமான புகாரை முன் வைக்கிறோம். அந்த அறிக்கையில் குற்றச்சாட்டுகளைத் தவிர வேறொன்றுமில்லை” என அவர் குறிப்பிட்டார்.
மேலும் சமர்பிக்கப்பட்ட அந்த அறிக்கையானது உண்மையில், 179-வது குற்றவியல் நடைமுறைக் கொள்கைகளின் படி செயல்படுத்தபடவில்லை என ஷாபி குறிப்பிட்டார். முறைப்படி, வழக்கு எதைப் பற்றியது எனவும், அதனை நிரூபிக்க நீங்கள் எம்மாதிரியான வழிமுறைகளை கையாள உள்ளீர்கள் என்பதையும் டோமி குறிப்பிட்டிருக்க வேண்டும் எனவும் ஷாபி தெரிவித்தார்.
“இரண்டாவது பகுதி காலியாக இருந்தது. அது முற்றிலும் அரசியல் சார்ந்த பேச்சாகும்” என நேற்று வழக்கு விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தப் போது ஷாபி தெரிவித்தார்.
இந்த வழக்கில் தாங்கள் வெற்றி பெறுவோம் எனவும் ஷாபி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே, தனது பிரதமர் பதவியை வைத்து, டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் 42 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்றதாக வழக்கின் தொடக்க அறிக்கையில் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் நேற்று தமது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
மலேசிய அரசாங்கத்தின் ஓய்வூதிய நிதியிலிருந்து எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிறுவனத்திற்கு 4 பில்லியன் ரிங்கிட்டைப் பெற்று தந்ததற்கு நஜிப்பிற்கு நேரடியாக தொடர்பிருப்பதை நிரூபிக்க இயலும் எனவும் டோமி குறிப்பிட்டிருந்தார். மேலும், ஹொனலுலுவில் உள்ள உயர்தர அழகு சாதன விற்பனை மையத்தில், அவரது கடன் பற்று அட்டையை பயன்படுத்தி, 130,625 அமெரிக்கா டாலருக்கு பொருட்கள் வாங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரணை வருகிற ஏப்ரல் 15-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.