கோலாலம்பூர்: பாஸ்டர் ரேய்மண்ட் கொ மற்றும் அமிர் சே மாட் ஆகியோர் காணாமல் போன விவகாரம் குறித்து, தற்போதைய காவல் துறைத் தலைவரின் பதிவி ஓய்வுக்குப் பிறகு, புதிதாகப் பதியேற்க இருக்கும் காவல் துறைத் தலைவர் விசாரணை நடத்துவார் என பிரதமர் மகாதீர் முகமட் கூறினார்.
இந்த சம்பவம் நடந்த போது, தற்போதைய காவல் துறைத் தலைவரான டான்ஶ்ரீ முகமட் புசி ஹாருன் காவல் துறை சிறப்பு பிரிவுக்கான தலைவராக இருந்ததை பிரதமர் சுட்டிக் காட்டினார். ஆகவே, புதிய காவல் துறைத் தலைவர் பதவியேற்றதும், தேவைப்பட்டால் முகமட் புசியை விசாரிக்கலாம் என பிரதமர் குறிப்பிட்டார்.
பாஸ்டர் ரேய்மண்ட் கொ மற்றும் அமிர் சே மாட் ஆகியோர் காணாமல் போனதற்கு காவல் துறை சிறப்பு பிரிவுதான் காரணம் என சுஹாகாம் கருத்துத் தெரிவித்ததற்கு பிரதமர் இவ்வாறு கருத்துரைத்தார்.
2017 மற்றும் 2016- ஆம் ஆண்டுகளில் இவ்விரண்டு நபர்களும் காணாமல் போன நேரத்தில் காவல் துறை சிறப்பு பிரிவு மேலாளராக முகமட் புசி இருந்துள்ளார். வருகிற மே 4-ஆம் தேதி அன்று இவர் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“இவ்விரண்டு நபர்களும் காணாமல் போனது பற்றி விசாரிக்க நமக்கு சான்றுகள் தேவை. என்ன நடந்தது என்பதை ஆராய இவர்களிடம் (சுஹாகாம்) சான்றுகள் உள்ளதா என்பது தெரியவில்லை. ஒருவேளை அவர்களிடம் ஆதாரங்கள் இருந்தால் அதனை வைத்து நாம் விசாரிக்கலாம். இந்த சம்பவம் தேசிய முன்னணி காலத்தில் நடந்துள்ளது. தேசிய முன்னணி காலத்தில் ஏராளமான விவகாரங்கள் எங்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும் மறைக்கப்பட்டுள்ளது” என பிரதமர் கூறினார்.