சென்னை: குக்கூ, ஜோக்கர் படங்களை தொடர்ந்து இயக்குநர் ராஜூமுருகன் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள படம் ஜிப்ஸி. இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி சமிபத்தில் வெளியிடப்பட்டு இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த படத்தின் பாடலான ‘வெரி வெரி பேட்’ எனும் பாடலும் சமீபத்தில் வெளியாகி பரபரப்பானது. விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்துக்கு தடைவிதிக்கக் கோரி தினேஷ் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
அதாவது, கடந்த 2014-ஆம் ஆண்டு அரசூர் மூவிஸ் உரிமையாளரான அம்பேத்குமார் ‘பப்பாளி’ என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக அவரிடம் 40 இலட்சம் ரூபாய் பணத்தை வாங்கியதாகவும், அத்தொகையை மூன்று மாதக் காலத்துக்குள் வட்டியுடன் திருப்பித் தருவதாகவும், தம்மிடம் கூறியிருந்ததாக தினேஷ் குறிப்பிட்டிருந்தார். ஆயினும், பப்பாளி படம் வெளியானப் பிறகும் இந்தத் தொகையை அம்பேத்குமார் திருப்பித் தரவில்லை என தினேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் காரணமாக, ஜிப்ஸி படத்தை தயாரித்து இருக்கும், அம்பேத்குமார் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்நிலையில் ஜிப்ஸி படம் வெளியாகுமா இல்லையா எனும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சசிகலா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக தயாரிப்பாளர் அம்பேத்குமார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.