கோலாலம்பூர்: தம்மை அடுத்த பிரதமர் எனக் கூப்பாடு போடுவதை முதலில் நிறுத்திக் கொள்ளுமாறு அம்னோ கட்சியின் துணைத் தலைவரும், ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலின் வேட்பாளருமான டத்தோஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார். நடந்துவரும் ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் இம்மாதிரியான கருத்துகள் அவ்வப்போது பிரச்சாரம் செய்பவர்களால் கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
“என்னை ஊக்கப்படுத்துவதற்காக அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள். என்னை பிரதமர் என்று அழைக்காதீர்கள், சீக்கிரமாக ‘கொன்று’ விடுவார்கள்” என ஹசான் குறிப்பிட்டார்.
“இம்மாதிரியான பிரச்சாரங்களை நான் கேட்டதில்லை. ஒருவேளை அவ்விடத்தில் நான் இருந்திருந்தால், அவர்களை உடனே நிறுத்தச் சொல்லி இருப்பேன்” என அவர் கூறினார்.
பிரதமராகும் எண்ணத்தை தாம் கொண்டிருக்கவில்லை என ஹசான் தெரிவித்தார். நண்பர்களும் அதனை புரிந்துக் கொண்டு செயல்படுவார்கள் என நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, நேற்று ரந்தாவில் நடந்த பிரச்சாரம் ஒன்றில், முன்னாள் மஇகா தலைவர் டாக்டர் சுப்ரமணியம், முகமட் ஹசான் இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற்றால், வருகிற பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், அவ்வாறு நடந்தால், நாட்டின் அடுத்தப் பிரதமராக முகமட் ஹசான் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் தெரிவித்திருந்தார்.