சான் பிரான்சிஸ்கோ- உலகின் பிரபலமான சமூக ஊடகங்களில் ஒன்றான டுவிட்டரில் தற்போது 1000 தளங்களைப் பின்தொடரும் வசதிகள் உள்ளன. இதன் மூலம் தனிநபர் பிரபலங்கள், செய்தித் தளங்கள் என பல்வேறு தளங்களை பயனர்கள் பின்தொடர்ந்து வந்தனர்.
ஆனால், தற்போது இந்த எண்ணிக்கை 400 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பொய்யான பெயர்களில் – ஏமாற்றுக் கணக்குகளைப் பலரும் டுவிட்டரில் திறந்து வைத்திருப்பதாலேயே இந்த வசதிக்கான எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் அறிவித்துள்ளது.
மேலும், பலர் ஒரு குறிப்பிட்ட தளத்தை முதல் நாள் பின்தொடர்வதும் (follow) அடுத்த நாளே அதே தளத்தைப் பின்தொடர்வதிலிருந்து இரத்து செய்வதும் (unfollow) அதிகமான அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு தளத்தை அதிகமானோர் பின்தொடர்வது போன்ற எண்ணிக்கையும், தோற்றமும் ஏற்படுத்தப்படுகிறது.
இதனைத் தடுக்கும் நோக்கத்திலும் டுவிட்டர் தனது புதிய விதிமுறையை அறிமுகம் செய்திருக்கிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) முதல் இந்த மாற்றம் அமுலுக்கு வந்திருக்கிறது.