கோலாலம்பூர்: 2019-ஆம் ஆண்டிற்கான இன ஒதுக்கீட்டை அடிப்படையாகக் கொண்டு மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை உடனடியாக வெளியிடப்பட வேண்டும் என கெடா மாநில மஇகா கட்சித் தலைவரான செனட்டர் எஸ். ஆனந்தன் கல்வி அமைச்சினை வலியுறுத்தியுள்ளார்.
ஒரு சிலர் இந்த விவகாரத்தை இன ரீதியாக கையாள முயற்சி செய்வதால் இதற்கு உடனடி தீர்வு அறிவிக்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.
“2019-ஆம் ஆண்டிற்கான மெட்ரிகுலேஷன் கல்லூரிகளுக்கு இந்திய மாணவர்களின் இட ஒதுக்கீடு பற்றிய பிரச்சனையைக் குறித்து கல்வி அமைச்சு அமைதி காத்து வருவது புரியாத ஒன்றாக உள்ளது”என அவர் கூறினார்.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ எம்.சரவணனும், ஜசெக சட்டமன்ற உறுப்பினர் இராமசாமியும், இந்த மெட்ரிகுலேஷன் பிரச்சனையை எழுப்பியுள்ள போதிலும், அமைச்சகம்எந்த ஒரு பதிலும் கூறாமல் இருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது என அவர் கூறினார்.
“எதனை மறைக்க முயற்சிக்கிறார்கள்? சீன மாணவர்களுக்கு 1,000 இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்த விசயம். ஆனால், மலாய், இந்தியர், சரவாக் மற்றும் சபா மாநில மாணவர்களுக்கு எத்தனை இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை அரசாங்கம் வெளியிட வேண்டும்.” என அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த விவகாரத்தில் அமைதிக் காத்து, முன்னாள் அரசாங்கம் போன்று தாமதமாக செயலாற்றுவது சரியான ஒன்றாக இருக்காது என ஆனந்தன் கூறினார்.
2013-ஆம் ஆண்டில், கல்வி அமைச்சராக இருந்த மொகிதின் யாசின், இந்திய மாணவர்களுக்காக மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் நுழைவதற்கு 1,500 இடங்களை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதை அறிவித்தார். இதனை அடுத்து, மஇகாவின் வேண்டுகோளுக்கு இணங்க, 2018-ஆம் ஆண்டில், முன்னாள் பிரதமர் நஜிப், மேலும் 700 இடங்கள் அளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.