கோலாலம்பூர்: இஸ்லாமியர் அல்லாதவர்கள் மலாய் ஆட்சியாளர்கள் மற்றும் இஸ்லாமிய மதத்தின் நிலைப்பாட்டை கேள்விகள் எழுப்பும் தைரியம் கொண்டுள்ளதாக பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறினார். முன்பு இவ்வாறான சூழல் இல்லையென்றாலும், தற்போது அது அதிகமாகக் காணப்படுகிறது என அவர் கூறினார்.
“இந்த சூழல் மிகவும் ஆபத்தானது. இளைய தலைமுறையினரின் எண்ணங்களில் தவறான கருத்துகளை விதைக்கும் விதமாக இதனைக் கருத வேண்டும்” என முகநூலில் வெளிவந்த காணொளி ஒன்றில் கூறினார்.
நம்பிக்கைக் கூட்டணியின் கீழ் இஸ்லாமிய மதம் மற்றும் மலாய் ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டிற்கு எதிராக பெருகி உள்ள எதிர்ப்பு குறித்த கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
“இந்த விவகாரமானது ஏற்கனவே நாட்டின் அரசியலமைப்பில் உள்ளதாகும். இது ஒன்றுபட்ட ஒரு சமூகத்தின் ஒப்பந்தமாகும். பன்முக சமுதாயத்தில் உள்ள முக்கிய இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டணி மற்றும் பாஸ் கட்சியின் கீழ் இது ஒப்புக் கொள்ளப்பட்டது” என்று அவர் கூறினார்.
அவ்வாறு ஒப்புக் கொள்ளப்பட்ட பிறகு தற்போது அது குறித்த கேள்விகளும் விமர்சனங்களும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என ஹாடி கூறினார்.