Home உலகம் இலங்கை: பதற்றச் சூழல் நீடிப்பதால், மக்கள் நிலை கேள்விக்குறி!

இலங்கை: பதற்றச் சூழல் நீடிப்பதால், மக்கள் நிலை கேள்விக்குறி!

793
0
SHARE
Ad

கொழும்பு: இலங்கையில் ஈஸ்டர் நாளன்று நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புக்குக் காரணமானவர்களை கைது செய்ய அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வரும் வேளையில், நேற்று வெள்ளிக்கிழமை மேலும் குண்டுகள் வெடித்தும், மர்ம கும்பல் ஒன்று பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு 15 உடல்கள் இறந்த நிலையில் கிடைக்கப்பட்டதாக இலங்கை தரப்பு தெரிவித்துள்ளது. அதில் ஆறு சிறார்களின் உடல்களும் அடங்கும் என அரசு தெரிவித்தது.

இந்த பதற்றச் சூழல் இன்னும் எத்தனை நாட்களுக்கு தொடரும் என்பது தெரியாத பட்சத்தில் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை பயத்துடன் கடந்த செல்கின்றனர்.

#TamilSchoolmychoice

இலங்கை தொடர் குண்டுவெடிப்புகளில் இதுவரையிலும் 253 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த சம்பவத்துக்கு காரணமாக இருக்கும் 140 ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களை இலங்கை அரசு கைது செய்து விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்தே இலங்கையைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறியுள்ளார்.

ஏற்கனவே, இந்திய அரசு இந்த தாக்குதல் குறித்து மூன்று முறை இலங்கையை எச்சரித்து, அந்நாடு அதனை பொருட்படுத்தாது இருந்ததை உலக மக்கள் சாடி வருகின்றனர். இன்னும், சிலர் இந்த தாக்குதல் மேலும் நடக்கலாம் எனவும், இலங்கைக்கு போதுமான உதவியை உலக நாடுகள் செய்வதற்கு உதவி கரங்களை கொடுக்க வேண்டும் என்றும் கருத்துரைத்து வருகின்றனர்.

எந்த ஒரு மனிதாபிமானமும் இல்லாத மிருக குணத்தைக் கொண்டு, தாங்கள் மடிவதோடு இல்லாமல் மற்றவர்களையும் கொல்லத் துணியும் ஒருவரை சட்டம் என்ன செய்யப் போகிறது எனும் கேள்விகளும் எழுந்துள்ளன.

முன்னதாக, இந்த கொடூரச் சம்பவத்தில் 359 பேர் மரணமுற்றதாகக் கூறிய இலங்கை அரசு, பின்பு அந்த எண்ணிக்கையை குறைத்து 253-ஆக அறிவித்தது. ஆங்காங்கே சிதறிக் கிடந்த மனித உடல் பாகங்களை அவர்கள் கணக்கில் எடுத்துக் கொண்டதன் காரணமாகவே இந்த எண்ணிக்கை கூடுதலாக அறிவிக்கப்பட்டது என இலங்கை அரசு குறிப்பிட்டுள்ளது. நேற்று பாதுகாப்புப் படை மீதான தாக்குதலை அடுத்து, மீண்டும் இலங்கையில் தாக்குதல்கள் நிகழும் சூழல் ஏற்படலாம் என அரசு எச்சரித்துள்ளது.

இந்தச் சூழலை சரிசெய்யவும், இலங்கையை மீண்டும் வழக்கமான வாழ்க்கை முறைக்கு கொண்டு செல்லவும், இன்னும் எத்தனை நாட்கள் எடுக்கும் என்பதை காலம்தான் கணித்து சொல்ல வேண்டும்.