கோலாலம்பூர்: பல்வேறு மதங்களின் தலைவர்கள் சம்பந்தப்பட்ட தேசிய உரையாடலுக்கு அடித்தளம் ஒன்றினை அமைத்துத்தர வேண்டி தாம் கேட்டுக் கொண்டதற்கு, இன்னமும் அரசாங்கம் தனது பதிலை தெரிவிக்கவில்லை என பெர்லீஸ் மாநில முப்தி டாக்டர் முகமட் அஸ்ரி சைனால் அபிடின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த சர்ச்சைக்குப் பின்னர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ஆம் தேதி, பிரதமர் துறைஅமைச்சர் முஜாஹிட் யூசோப் ராவாமற்றும் பினாங்கு துணைமுதல்வர் டாக்டர் பி.இராமசாமி ஆகியோருடனான சந்திப்பின் போது, இந்த கருத்தினை தாம் முன்வைத்ததாக அவர் கூறினார்.
“மத அடிப்படையிலான விவகாரங்கள் முதலில் அங்கு முன்வைக்கப்பட வேண்டும். இந்நாட்டில் மக்களுக்கு இடையே பதற்றத்தைத் தவிர்க்க வேண்டும். இந்த விவகாரத்தை ஜாகிம் எடுத்து நடத்துவதற்கு முன்மொழியப்பட்டது. அதற்கு அமைச்சரும் ஒப்புக்கொள்ளும் வகையில் இருந்தார். துரதிர்ஷ்டவசமாக, அது இன்று வரையிலும் நடக்கவில்லை. எங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பது எனக்கு தெரியவில்லை” என அஸ்ரி குறிப்பிட்டிருந்தார்.
இது நாள் வரையிலும், மத அடிப்படையிலான பிரச்சனைகளை களைவதற்கு அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என அவர் கூறினார்.
இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க விரும்புகிறாத இல்லையா என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.