வாஷிங்டன்: கடந்த பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசாரை அனைத்துலக பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரி பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கோரியிருந்தும், அதற்கு முட்டுக்கட்டையாக சீனாவின் முடிவு இருந்தது.
சீன அரசு மசூத் அசாரை அவ்வாறு அறிவிக்க தனது ஒப்புதலைத் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், இந்தியாவின் தொடர் அழுத்தத்தின் காரணமாக சீனாவும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் மசூத் அசாரை அனைத்துலக பயங்கரவாதியாக ஐநா சபை அறிவித்துள்ளது.
இந்திய எல்லைக்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீர் பகுதியில் இந்திய இராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஜய்ஷ்–இ –முகமட் அமைப்பின் தலைவர் மசூத் அசார் மூளையாக செயல்பட்ட நிலையில் அவரை அனைத்துலக பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் கோரிக்கை வைத்திருந்தது.
இந்த அறிவிப்பின் மூலம் பாகிஸ்தான் உட்பட உலகம் முழுவதும் உள்ள அவனது வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்படும். இதனால் மசூத் அசார், தொடர்புடைய அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்தோ, பிற பகுதிகளிலிருந்தோ நிதி திரட்ட இயலாது. மேலும், அசார் பிற நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கும் பட்சத்திலும் அதற்கு அவனுக்கு நெருக்கடி ஏற்படும்.