கோலாலம்பூர்: கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற 2019-ஆம் ஆண்டுக்கான உலக திருமதி போட்டியில், மூன்று குழந்தைகளுக்கு தாயாகிய கோகிலம் கதிர்வேலு, மூன்றாவது நிலையில் இடம்பெற்று மலேசியாவிற்கு பெருமை தேடித் தந்துள்ளார்.
பெண்கள், அவர்களின் கனவுகள் மற்றும் நம்பிக்கையுடன் எந்த சூழ்நிலையிலும் சமரசம் செய்து கொள்ளக் கூட்டது எனும் கருத்தினை கோகிலம் முன் வைத்துள்ளார்.
34 வயதான கோகிலம் கூறுகையில், திருமணமான பெண்கள், திருமணமானதும் தங்கள் வாழ்க்கை முடிந்து விட்டது என்ற எண்ணத்தை விட்டொழிக்க வேண்டும் எனவும், நாட்டைக் கட்டியெழுப்பவும், பெண்களை திறமை மிக்கவர்களாக மிளிரச் செய்யவும் அவர்களது பங்கு தேவைப்படுகிறது என்று கூறினார்.
கோலாலம்பூரில் வசிக்கும் கோகிலம் 36 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களுடன் போட்டியிடும் நிலை ஏற்பட்டதாகவும், அப்போட்டி கடுமையாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். கடந்த 1984-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இப்போட்டியில் உலகளவில் உள்ள 80 போட்டியாளர்கள் பங்குக் கொண்டனர்.