Home நாடு நஜிப்பிடம் கைப்பற்றிய 133 மில்லியன் சொத்துகளை பறிமுதல் செய்ய வழக்கு

நஜிப்பிடம் கைப்பற்றிய 133 மில்லியன் சொத்துகளை பறிமுதல் செய்ய வழக்கு

808
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 1எம்டிபி பணத்திலிருந்து வாங்கப்பட்டதாக நம்பப்படும் – நஜிப் துன் ரசாக்கிடம் இருந்தும் அவரது மனைவி ரோஸ்மாவிடம் இருந்தும் கைப்பற்றப்பட்ட – 133 மில்லியன் ரிங்கிட் மதிப்பு கொண்ட ரொக்கம், நகைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்ய அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் வழக்கொன்றை இன்று புதன்கிழமை சமர்ப்பித்தது.

பறிமுதல் செய்யப்படவிருக்கும் இந்த சொத்துகள் மீது உரிமை கொண்டாடுபவர்கள், இந்த வழக்கை எதிர்த்து எதிர்மனு சமர்ப்பிக்கலாம் என்றும் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் வழக்கின் மூலம் அறிவித்துள்ளது.

பல்வேறு அரசாங்கச் சட்டங்களுக்குப் புறம்பான முறையில் இந்த சொத்துகள் கையாளப்பட்டிருக்கின்றன அல்லது புரியப்பட்ட குற்றங்களுக்கான ஆதாரங்களாக இந்த சொத்துகள் இருக்கின்றன என்றும் இன்றைய வழக்கில் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்தது.

நஜிப்-ரோஸ்மாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சொத்துகளின் விவரங்கள்
#TamilSchoolmychoice

இந்த வழக்கு குறித்து பதிலளித்த நஜிப்பின் வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா தங்கள் தரப்பு இந்தப் பறிமுதல் வழக்கை எதிர்த்து வழக்காடுவோம் எனத் தெரிவித்தார். தங்களின் தரப்பு வழக்கு முடிவடையாத நிலையில் இத்தகைய பறிமுதல் நடவடிக்கைகள் முறையல்ல என்றும் ஷாபி அப்துல்லா குறிப்பிட்டார்.

133 மில்லியன் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் வழக்குக்கான அறிவிக்கைகளில் நஜிப், அவரது மனைவி ரோஸ்மா, அவர்களின் புதல்வர் நோர் அஷ்மான் ரசாக், மகள் நூர்யானா நஜ்வா, ரோஸ்மாவின் முதல் கணவரின் பிள்ளை ரிசா ஷாரிர் அப்துல் அசிஸ் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மேலும் 7 பேர்களும் இந்த வழக்கில் பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் கோல்ட்மேன் சாச்ஸ் வங்கியின் முன்னாள் அதிகாரி ரோஜர் இங் ஆவார். 1எம்டிபி ஊழல் தொடர்பாக நியூயார்க் நீதிமன்றத்தில் இவர் குற்றவியல் வழக்குகளை எதிர்நோக்கியிருக்கிறார்.

தலைமறைவாகியிருக்கும் லோ தெக் ஜோ அல்லது ஜோ லோ என்பவரின் தாயாரும் அந்த எழுவரில் ஒருவராவார்.

மேலும் சில நிறுவனங்களும், அறக்கட்டளைகளும் இந்த வழக்கில் பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.