சண்டாக்கான்: வருகிற சனிக்கிழமை நடைபெற இருக்கும் சண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் விவியன் வோங் வெற்றிப் பெற்று மக்களின் பிரதிநிதியாக வர வேண்டும் என மக்கள் விரும்புவதாக சபா மாநில முதலமைச்சர் ஷாபி அப்டால் நம்பிக்கைத் தெரிவித்தார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலான தேர்தல் பிரச்சாரத்தின் போதும், வாக்கு சேகரிப்பின் போதும், விவியனுக்கு மக்கள் பெரிய அளவில் ஆதரவு தருவது குறித்து அவர் குறிப்பிட்டார். மக்களுக்கு தேவையான வேலை வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதன் மூலம் சண்டாக்கான் நகரின் அபிவிருத்தியை ஊக்கமளிக்கலாம் எனும் விவியனின் நம்பிக்கைக்கு மாநிலம் என்றும் உறுதுணையாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
தீபகற்க மாநிலங்களைக் காட்டிலும் சபா மாநிலம் முன்னேற்றகரமான நிலையை அடைவதற்கு சாத்தியங்கள் இருப்பதாக அவர் கூறினார். எனவே, மாநில அரசு இப்போது மாநில பொருளாதாரத்தின் வளர்ச்சியை முடுக்கிவிடும் விதமாக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
ஒரு குறுகிய காலத்தில் மாநிலத்தையும் நாட்டையும் மாற்றியமைப்பது என்பது ஓர் எளிதான காரியம் அல்ல என ஷாபி கூறினார். கடந்த 60 ஆண்டுகளில் தவறான அரசாங்கத்தால் நிர்வகிக்கப்பட்ட இந்நாட்டினை மீட்டெடுப்பது சாத்தியப்படும், ஆனால் மக்கள் பொறுத்திருக்க வேண்டும் என அவர் நேற்று புதன்கிழமை நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.