Home இந்தியா அயோத்தி வழக்கு: ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நடுவர்கள் குழுவுக்கு அவகாசம்!

அயோத்தி வழக்கு: ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நடுவர்கள் குழுவுக்கு அவகாசம்!

624
0
SHARE
Ad

புது டில்லி:  அயோத்தி வழக்கில் சமரச பேச்சுவார்த்தையை முழுமையாக முடிக்க நடுவர்கள் குழுவுக்கு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரையிலும் உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு அடங்கிய நடுவர்கள் குழு கேட்டுக்கொண்டதன் பேரில், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அவகாசம் வழங்கியது.

#TamilSchoolmychoice

உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது அயோத்தி. இங்குள்ள ராமஜென்ம பூமி, பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம், 2010-இல் தனது தீர்ப்பை வழங்கியது.

அந்த தீர்ப்பின்படி, 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தை, சுன்னி வக்ப் வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய அமைப்புகள் பகிர்ந்து கொள்ள உத்தரவிடப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து, 14 மேல் முறையீடு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த மார்ச் 5-ஆம் தேதியுடன் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.

இதன் முடிவில் சமரச குழு அமைத்து பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு உச்சநீதிமன்றம் முடிவு செய்தது. இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சமரச குழு எட்டு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சமரச குழுவினர் தங்களது இடைக்கால அறிக்கையை நேற்று வியாழக்கிழமை சமர்ப்பித்ததாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரன்ஜன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது நடுவர்கள் குழு கேட்டுக்கொண்டதன் பேரில், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அவகாசம் வழங்கியது.