வாஷிங்டன்: வட கொரியா அனைத்துலக தடைகளை மீறியதாக குற்றம்சாட்டி அந்நாட்டு சரக்கு கப்பல் ஒன்றை அமெரிக்கா அண்மையில் பறிமுதல் செய்துள்ளது.
வட கொரியா அதிக அளவில் ஏற்றுமதி செய்துவரும் நிலக்கரியை கொண்டுசெல்ல இந்த கப்பல் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்த அமெரிக்க சட்டத்துறை, ஆனால் இந்த போக்குவரத்து ஐநாவின் ஏற்றுமதி தடையை மீறியுள்ளதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உறவுகள் தொடர்ந்து மோசமாகிவரும் சூழலில், அனைத்துலக தடைகளை மீறியதாக குற்றம்சாட்டி வட கொரிய கப்பல் ஒன்றை அமெரிக்கா பறிமுதல் செய்வது இதுவே முதல் முறையாகும்.
கடந்த பிப்ரவரியில், வியட்நாமின் தலைநகர் ஹனோயில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்–உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு தலைவர்கள் இடையே நடந்த சந்திப்பு எந்த உடன்படிக்கையும் எட்டப்படாமல் முடிந்தது.
கடந்த வாரத்தில் இரண்டு முறை ஆயுத சோதனைகளை வட கொரியா நடத்தியது. இது தங்களுக்கு சலுகைகள் வழங்க அமெரிக்காவுக்கு அழுத்தம் தர வட கொரியா மேற்கொண்ட நடவடிக்கையாக பரவலாக பார்க்கப்படுகிறது.
குறுகிய தூரம் சென்று தாக்கும் பல ஏவுகணைகளை சோதனை செய்த ஒரு வாரத்திற்கு பின்னர் அடையாளம் காணமுடியாத ஏவுகணைகளை வடகொரியா ஏவியுள்ளதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.