Home கலை உலகம் திரைவிமர்சனம்: “அயோக்யா” – விஷாலின் பாராட்டத்தக்க “கர்ண” அவதாரம்

திரைவிமர்சனம்: “அயோக்யா” – விஷாலின் பாராட்டத்தக்க “கர்ண” அவதாரம்

1275
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சில நிதிப் பிரச்சனைகளால் வெள்ளிக்கிழமை (மே 10) வெளியாகவிருந்த விஷாலின் ‘அயோக்யா’ திரைப்படம் சற்றே தாமதமாகி மறுநாள் சனிக்கிழமை வெளியானது. தான் தலைமையேற்றிருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்சனை, நடிகர் சங்கத்தில் பிரச்சனை, இதற்கிடையில் விரைவில் திருமணம் – என  தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களில் இருந்தாலும் இரசிகர்களை ‘அயோக்யா’ படத்தில் ஏமாற்றவில்லை விஷால்.

அனாதையாக இருந்து சமூக அவலங்களினால் அடிபட்டு, பின்னர் ஏமாற்று வேலைகளின் மூலம் ஒரு காவல் துறை ஆய்வாளராக (இன்ஸ்பெக்டர்) – அயோக்கியத்தனங்களின் மொத்த கலவையாக – உருவெடுக்கும் கர்ணன் என்ற கதாபாத்திரத்தில் தனது உடல்மொழி, நடை, உடை, பாவனை என அத்தனை அம்சங்களையும் மாற்றிக் கொண்டு, புதுவித பாணியில் சிறப்பாக நடித்திருக்கிறார் விஷால்.

நியாயமான, நேர்மையான காவல் துறை கான்ஸ்டபிள் அப்துல் காதராக இயக்குநர் கே.எஸ்.இரவிக்குமார், அரைக்கால் சிலுவாருடன் அசத்தலான வசனங்களோடு அதிரடி வில்லன் காளிராஜனாக பார்த்திபன், சில காட்சிகளிலே வந்தாலும் கண்கலங்க வைக்கும் எம்.எஸ்.பாஸ்கர், கிளிகளுக்கு உணவூட்டிப் பாதுகாக்கும் அழகுக் கிளி கதாநாயகி சிந்துவாக ராஷி கண்ணா, என மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்து அயோக்யாவை மெருகேற்றியிருக்கிறார்கள்.

தெலுங்குப் படத்தின் திரைக்கதை

#TamilSchoolmychoice

ஏற்கனவே, தெலுங்கில் ‘டெம்பர்’ என்ற பெயரில் ஜூனியர் என்டிஆர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படத்தை அப்படியே தமிழுக்குக் கொண்டு வந்து இரசிக்கும்படி எடுத்திருக்கிறார் புதுமுக இயக்குநர் வெங்கட் மோகன். ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி இயக்குநராகப் பயிற்சி பெற்றவர் வெங்கட் மோகன்.

இடையில் இதே ‘டெம்பர்’ கதை இந்தியில் ‘சிம்பா’ என்ற பெயரில் பல உருமாற்றங்களுடன், ரோஹிட் ஷெட்டி இயக்கத்தில் – ரன்வீர் சிங் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது என்பது இன்னொரு தகவல்.

சிறுவயதில் தான் அனுபவித்த கொடுமைகளால் பணம் ஒன்றுதான் குறிக்கோள் என்றும், போலீஸ் வேலைதான் சிறந்த பதவி என்றும் முடிவெடுத்து அதற்கேற்ப வாழ்க்கையை நடத்துகிறான் கர்ணன். பணத்திற்காக போலீஸ் பதவியைப் பயன்படுத்தி அத்தனை அட்டூழியங்களையும் நடத்த, இடையில் தனது தவறுகளால் ஏதுமறியாக ஓர் இளம் பெண் வில்லன் பார்த்திபனின் சகோதரர்களால் கொடுமையாகத் துன்புறுத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டது தெரியவர அவரது குணமும் மாறுகிறது.

வில்லனின் சகோதரர்களைச் சிறையில் தள்ள, அவர் முயற்சி எடுக்க, அதே பணபலத்தைக் கொண்டு பார்த்திபன் கொலைக்கான ஆதாரங்களை அழிக்க, இறுதியில் எத்தகைய தியாகத்தைச் செய்து வில்லன்களைப் பழிவாங்குகிறார் என்பதுதான் ‘அயோக்யா’வின் திரைக்கதை.

ஓர் உயிர் எந்த காரணத்திற்காக இவ்வுலகில் பிறப்பெடுக்கிறதோ – அந்த நோக்கத்தை நிறைவேற்றாமல் உலகை விட்டுப் பிரியாது என்ற பகவத் கீதையின் ஆழமான தத்துவத்தையும் படத்தில் இழையோட விட்டிருக்கிறார்கள்.

மற்ற அம்சங்கள்…

பின்னணி இசையில் சாம் சி.எஸ். தனது இருப்பைக் காட்டியிருந்தாலும், பாடல்கள் எடுபடவில்லை. வி.ஐ.கார்த்திக்கின் ஒளிப்பதிவும், அதற்கேற்ற ஸ்ரீகர் பிரசாத்தின் படத் தொகுப்பும் இறுதி வரை படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு செல்கின்றன.

நகைச்சுவைக்கு இடைச் சொருகலாக அவ்வப்போது யோகிபாபு வந்து தலைகாட்டிச் செல்கிறார்.

அயோக்யா படத்தின் அறிவிப்பு வெளியானபோது முதல் தோற்றமாக கையில் பீர் பாட்டிலுடன் போலீஸ் வண்டியில் விஷால் அமர்ந்திருக்கும் காட்சி வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஆனால், ஏனோ படத்தில் அத்தகைய காட்சி எதுவும் இல்லை.

முதல் பாதியில் வழக்கமான போலீஸ் காட்சிகள் என்பது போல் தோன்றினாலும், படத்தின் இரண்டாவது பாதியில் பணத்துக்காக விஷால் செய்யும் தவறுகள் எப்படி ஒட்டுமொத்தமாக மற்ற குற்றங்களுக்கு துணைபோயின என்பதை முடிச்சுப் போட்டுக்காட்டும் இடத்தில் இயக்குநர் பாராட்டு பெறுகிறார். திரைக்கதையும் தனித்து நிற்கிறது.

இறுதிக் காட்சியில் எல்லா ஆதாரங்களும் அழிக்கப்பட்டு விட்ட நிலையில் எந்த ஆதாரத்துடன் விஷால் வரப்போகிறார் என படத்தின் கதாபாத்திரங்களும், இரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், தனது கதாநாயகத்தனத்திற்கு சமரசம் செய்து கொள்ளாமல் விஷால் எடுக்கும் முடிவு – உண்மையிலேயே பாராட்டத்தக்கதாகும்.

அது என்ன முடிவு என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!

ஆம்! பார்க்க வேண்டிய படம்தான் ‘அயோக்யா’ – விஷாலின் ‘கர்ண’ அவதாரம் நிச்சயம் உங்களை ஏமாற்றாது.

-இரா.முத்தரசன்