Home Uncategorized இந்தியத் தேர்தல் – நட்சத்திரத் தொகுதிகள் # 10 : தென் சென்னை – கவிதாயினி...

இந்தியத் தேர்தல் – நட்சத்திரத் தொகுதிகள் # 10 : தென் சென்னை – கவிதாயினி தமிழச்சி தங்கபாண்டியன் வசமாகுமா?

676
0
SHARE

(இந்தியப் பொதுத் தேர்தலில் மிகவும் ஆவலுடன் முடிவுகள் எதிர்பார்க்கப்படும் – பிரபலங்கள் அல்லது முக்கிய வேட்பாளர்கள் மோதும் – சில நட்சத்திரத் தொகுதிகளின் கள நிலவரங்களைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

தமிழக அரசியலில் – ஏன் இந்திய அளவிலான அரசியல்வாதிகளுக்கிடையிலும் – ஆடை அணிகலன்கள் வடிவமைப்பிலும், அணிவதிலும், ஒருவருக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட வேண்டுமானால், நிச்சயம் தமிழச்சி தங்கபாண்டியன் (படம்) தட்டிச் செல்வார்.

ஆடம்பரத்தையோ, செல்வச் செழிப்பையோ காட்டாத எளிமையான பாசி மணிகள், செயற்கை அணிகலன்கள் இவற்றோடு கண்ணைப் பறிக்கும் ஆடைகளில் கவர்பவர் தமிழச்சி தங்கபாண்டியன். கல்லூரி படிக்கும் பிள்ளைகளைக் கொண்டிருந்தாலும், இவரும் இன்னும் கல்லூரி மாணவி போலவே தோற்றம் தருவது இவரது இன்னொரு சிறப்பு.

தங்கம் தென்னரசு – முன்னாள் திமுக அமைச்சர் – தமிழச்சி தங்கபாண்டியனின் சகோதரர்

இவரது தந்தை தங்கபாண்டியன் கலைஞர் கருணாநிதியின் தீவிர ஆதரவாளராக தமிழக அரசியலில் வலம் வந்தவர். தமிழச்சியின் சகோதரர் தங்கம் தென்னரசுவும் இன்று திமுகவின் முக்கியப் புள்ளிகளில் ஒருவர்.

ஆனால் என்றுமே தமிழச்சியின் முகம் தமிழ்க் கவிதையின் முகமாகத்தான் இருந்து வந்திருக்கிறது. தனது அழகுத் தமிழ் கவிதைகளால் தமிழ்க் கவிதா இரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர் பின்னர் மேடைகளிலும் தமிழ் இலக்கிய உரைகள் ஆற்றியும், கவியரங்கங்களில் கலந்து கொண்டும் தனது ஆளுமையை நிரூபித்தார்.

அவ்வாறு பொதுமேடைகளில் தோன்றும் அவர் என்ன அணிகிறார் – எப்படி அணிகிறார் – என்பதும் பெண்களிடையே – ஏன் ஆண்களிடத்திலும் விவாதப்  பொருளாகியிருக்கிறது.

மலேசியாவுக்கும் வந்து இலக்கிய உரைகள் ஆற்றி நமது மலேசியர்களைக் கவர்ந்தவர் தமிழச்சி தங்கபாண்டியன்.

சென்னை நகரின் 3 நாடாளுமன்றத் தொகுதிகளான தென் சென்னையில் திமுக வேட்பாளராக இந்த முறை களமிறங்கியிருக்கிறார்.

அண்ணாதுரை வென்ற தென் சென்னை

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா (படம்) 1967 நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற தொகுதி தென் சென்னை. 1967 பொதுத் தேர்தலில் அதிக தொகுதிகளை வெல்வோம், ஆனால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என நம்பிய அண்ணா, அப்போது சட்டமன்றத்தில் போட்டியிடாமல் தென் சென்னை நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டார்.

ஆனால், எதிர்பாராதவிதமாக திமுக ஆட்சியைப் பிடிக்க, அண்ணா முதல்வரானார். அவரது தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியை இராஜினாமா செய்தார். தொடர்ந்து நடைபெற்ற இடைத் தேர்தலில் கருணாநிதியின் மருமகன் முரசொலி மாறனை வேட்பாளராக நிறுத்த, அவரும் வெற்றி பெற்றார்.

அமரர் முரசொலி மாறன்

அதன் பின்னர் முரசொலி மாறன் சில தவணைகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வரலாற்றைக் கொண்டது தென் சென்னை.

இன்றைக்கு, படித்தவர்கள், பணக்காரர்கள், நவீனமயமான சாலைகள், பிரம்மாண்டமான அங்காடி வணிக வளாகங்களைக் கொண்ட தொகுதியாக வளர்ச்சி பெற்று நிற்கிறது தென் சென்னை.

கடும் போட்டியை வழங்கும் அதிமுக

கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் அதிமுக கைப்பற்றிய தென் சென்னை தொகுதியைக் குறிவைத்து அங்கு வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார் தமிழச்சி தங்கபாண்டியன்.

ஜெயவர்த்தன் ஜெயகுமார்

அதிரடி அறிவிப்புகளை அவ்வப்போது கொளுத்திப் போடும் அதிமுகவின் அமைச்சர்களில் முக்கியமானவர் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார். இவரது மகன் ஜெயவர்த்தன்தான் அதிமுகவின் வேட்பாளர். 2014 பொதுத் தேர்தலிலேயே ஜெயலலிதாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் – அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் – என்ற அடையாளங்களும் ஜெயவர்த்தனுக்கு உண்டு.

எனவே, இங்கு இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது. ஏப்ரல் 18-இல் வாக்களிப்பும் நிகழ்ந்து முடிந்திருக்கிறது.

இந்த முறை திமுக நிறுத்தியிருக்கும் இரண்டு பெண் வேட்பாளர்களான கனிமொழியும், தமிழச்சியும், இருவருமே கவிதாயினிகள் என்ற முகங்களைக் கொண்டவர்கள்.

பேரறிஞர் அண்ணா, முரசொலி மாறன், டி.ஆர்.பாலு, வைஜயந்திமாலா பாலி, நாஞ்சில் மனோகரன் போன்ற தமிழக அரசியலின் பிரபல முகங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாகக் கண்ட தென் சென்னை இந்த முறை ஒரு கவிதாயினியின் வசமாகுமா?

-இரா.முத்தரசன்

Comments