ஷா அலாம்: மலேசிய வானொலி தொலைக்காட்சி நிறுவனமான ஆர்டிஎம் மாநில அரசு உட்பட அனைத்து தரப்பினருக்கும் குறிப்பாக சரவாக் மாநிலத்திற்கும் அதன் கடமைகளை சரிவர செயல்படுத்தியுள்ளது என தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆர்டிஎம் மாநிலம் சம்பந்தப்பட்ட நிகழ்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை எனும் கருத்தினை அதன் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மறுத்தார்.
கடந்த நான்கு மாதங்களில் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், மற்றும் சரவாக் மாநில அமைச்சர்கள் தொடர்பாக, ஆர்டிஎம் 181 நிகழ்ச்சிகளை பதிவுச் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆர்டிஎம்க்கு முழுமையான பத்திரிக்கை சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்க கொள்கைக்கு உட்பட்டு, அதன் கடமையை சரிவர அது செய்து வருவதாகவும் கோபிந்த் கூறினார்.
சமீபத்தில், சரவாக் மாநில சுற்றுலா, கலாச்சாரம், கலை, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் டத்தோ அப்துல் காரிம் ஹம்சா, அம்மாநிலத்தின் நிகழ்ச்சிகளை ஆர்டிஎம் குறைவாக பதிவு செய்வதாகக் கூறி தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருந்தார்.