ஜோர்ஜ் டவுன்: மெட்ரிகுலேஷன் விவகாரத்தையும், தனியார் துறை வேலை அமர்வுக்காக சீன மொழித் தேவையையும் ஒன்றுபடுத்திப் பேசிய கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக்கின் கருத்து அர்த்தமற்றது என பினாங்கு துணை முதல்வர் பி. இராமசாமி சாடினார்.
“ஓர் அமைச்சர் இன்னமும் இனபாகுபாட்டினை முன்வித்து பேசுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அம்னோ அரசியல்வாதிகளுக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம் உள்ளது?” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தனியார் துறையில் வேலை கிடைப்பதில் மலாய்க்காரர்கள் சிரமத்தை எதிர் நோக்கி வந்தால் அதனை, மஸ்லீ அமைச்சரவையில் பேசியிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இதனிடையே, மெட்ரிகுலேஷன் வகுப்புகளில் நுழைவதற்கு மட்டும் இன அடிப்படையிலான அம்சத்தை மக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது எனவும் வேலை அமர்வுகளின் போது கண்டிப்பாக சீன மொழி தெரிந்திருக்க வேண்டும் எனும் அம்சத்தையும் முன்வைப்பது குறித்தும் மக்கள் ஆராய வேண்டும் என மஸ்லீ மாலிக் குறிப்பிட்டிருந்தார்.
இம்மாதிரியான கட்டுபாடுகளினால் நிறைய பூமிபுத்ரா மாணவர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை கிடைக்காமல் திண்டாடுகிறார்கள் என்றும் அவர் கருத்துரைத்திருந்தார்.