கொழும்பு: இலங்கையில் இறுதிக்கட்ட போரில் வீரமரணம் அடைந்தவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 18–ஆம் தேதி நினைவு தினம், ஈழ ஆதரவாளர்களால் பல்வேறு நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
இலங்கை தமிழர்களினால் அனுசரிக்கப்படுகின்ற மே18–ஆம் நினைவு தின நிகழ்விற்கு இராணுவத்தினரால் எந்தவித இடையூறுகளும் விளைவிக்கப்படாது என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நாளை சனிக்கிழமை அனுசரிக்கப்பட இருக்கும் இந்த தினத்தை, இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்டவிதிகளுக்கு உட்பட்டு, நினைவு தினத்தை அனுசரிப்பதற்கான உரிமை அனைவருக்கும் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
அவசரகால சட்டமும், நினைவு தின அனுசரிப்பும் இருவேறு விடயங்கள் என சுட்டிக்காட்டிய இராணுவ தளபதி, நினைவு தினத்தை உரிய விதிமுறைகளின் கீழ் முன்னெடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் கடந்த 2009–ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிகட்ட போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.