ஜெனீவா- இறுதிக்கட்ட போரின்போது இலங்கையில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் அரங்கேறியது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம்தான் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா., மனித உரிமை ஆணையர் சையல் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
பன்னாட்டு நீதிபதிகள் கொண்ட நீதிமன்றம் மூலம் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா., அறிக்கையில் திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
“போர்க்குற்றங்களை விசாரிக்க இலங்கை சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும். ஒருங்கிணைந்த அனைத்துலக நீதிபதிகள், பல நாடுகளைச் சேர்ந்த விசாரணை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் அடங்கிய குழு உருவாக்கப்பட வேண்டும். அதுபோன்ற விசாரணை நடந்தால்தான், இலங்கையில் வாழும் மக்களுக்கு, அதிலும் குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நம்பிக்கை பிறக்கும்,” என ஐ.நா., அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இறுதிக்கட்ட போரின் போதும், அதற்கு முன்பாகவும் அப்பாவி மக்களை இலங்கை ராணுவமும், விடுதலைப் புலிகளும் கொன்றுள்ளனர் என்றும், பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்தவர்களையும் இலங்கை ராணுவம் கொன்று குவித்தது என்றும் ஐ.நா., மனித உரிமை ஆணையர் சையல் அல் ஹுசைன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை விடுதலைப் புலிகள் கொன்றுள்ளனர் என்று தெரிவித்துள்ள அவர், அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் தமிழ் அரசியல் தலைவர்களும் அடங்குவர் என கூறியுள்ளார்.
எனவே இரு தரப்பிலுமே மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக ஐ.நா., அறிக்கை தெரிவிக்கிறது. எனினும், போர் முடிந்து பல ஆண்டுகளான பிறகும் இலங்கை அரசு ஒருவரைக் கூட போர்க்குற்றத்திற்காக தண்டிக்கவில்லை என ஐ.நா., மனித உரிமை ஆணையம் சுட்டிக்காட்டி உள்ளது.