ஜோர்ஜ் டவுன் – இதுவரையில் நகரமன்றமாக (முனிசிபாலிடி) இருந்து வந்த செபராங் பிறை நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் மாநகரமாக அங்கீகரிக்கப்படும் என வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சுரைடா கமாருடின் அறிவித்தார்.
கடந்த வாரம் அமைச்சரவை இந்த முடிவைச் செய்தது எனக் கூறிய சுரைடா, இன்னும் இரண்டு வாரங்களில் இதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு நடைமுறைகள் பூர்த்தியாகும் என்றும் அதன் பின்னர் முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
மாநில அளவிலான அறிவிப்பும் முறையாக வெளியிடப்படும்.
ஓர் உள்ளூராட்சி மன்றம் 5 இலட்சம் மக்கள் தொகையையும், 100 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட வருமானத்தையும் கொண்டிருக்கும் பட்சத்தில் அந்நகர் மாநகராக அறிவிக்கப்படும். செபராங் பிறையை மாநகராக உருமாற்றும் நடவடிக்கைகள் கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்டன.
செபராங் பிறை நிர்வாகம் 747.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில் 946,200 மக்கள் தொகையைக் கொண்ட நாட்டிலேயே மிகப் பெரிய உள்ளூராட்சி மன்றமாக செபராங் பிறை திகழ்கிறது.
இந்த ஆண்டு 271.2 மில்லியன் ரிங்கிட் வருமானத்தைப் பெற செபராங் பிறை இலக்கு கொண்டிருக்கிறது.