புது டில்லி: இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் இன்னும் இரண்டு நாட்களில் வெளி வர இருக்கும் வேளையில், கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா இன்றிரவு செவ்வாய்க்கிழமை விருந்து அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், இந்த விருந்து உபசரிப்பு நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
டெல்லியில் உள்ள தி அசோக் தங்கும் விடுதியில் இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்நிகழ்ச்சியின் போது, ஆட்சியமைப்பது குறித்து முக்கிய ஆலோசனையில் அமித் ஷா ஈடுபடுவார் என தெரிய வருகிறது.
இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை தேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதில் பாஜக கூட்டணி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 302 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 122 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றிரவு நடக்க இருக்கும் விருந்து நிகழ்ச்சியில், அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.