இந்த முடிவின் காரணமாக, ஹூவாவெய் கைத்தொலைபேசிகளில் அண்ட்ரோய்ட் தொழில் நுட்பத்தில் இயங்கும் குறுஞ்செயலிகள் செயல்படுத்தப்படாமல் போனது.
சீனா மீது அடுக்கடுக்கான வணிகப் போர் அதிரடிகளைத் தொடுத்து வரும் டொனால்ட் டிரம்ப் அரசாங்கம் தேசியப் பாதுகாப்புக்கு மிரட்டலாக இருக்கிறது என்று கூறி அண்மையில் ஹூவாவெய் நிறுவனத்தைக் கறுப்புப் பட்டியலிட்டது.
இதனைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் தனது இயங்குதள (operating system) மென்பொருளை ஹூவாவெய் கைத்தொலைபேசிகளிலிருந்து மீட்டுக் கொண்டது.
இது குறித்து கருத்துரைத்த ஹூவாவெய் டெக்னாலாஜிஸ் நிறுவனர் ரென் ஷெங்பெ, அமெரிக்க அரசாங்கத்துடனான மோதல்களை முன்கூட்டியே தாம் ஊகித்திருந்ததாகக் கூறினார்.
“உலகின் உச்சியில் நிற்கும், இந்த ஓர் இலட்சியத்திற்காக தனிநபர்களும் குடும்பங்களும் தங்களின் நலன்களை தியாகம் செய்துள்ளனர்” என்றுஅவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் இந்த தடையானது ஹூவாவெய்யின் 5ஜி திட்டங்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்று கூறினார்.
ஹூவாவெய் நிறுவனம் அமெரிக்க நிறுவனங்களுக்கு நிகரான குறைக்கடத்திகளை உருவாக்க இயலும் என்றும், இருந்தபோதிலும் அமெரிக்காவிடமிருந்து அதனை வாங்குவதை நிறுத்தப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க நிறுவனங்களுக்கு ஹுவாவெய் நிறுவனம் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார். இந்த நெருக்கடி எவ்வளவு காலம் நீடிக்கும் எனக் கேட்ட போது, அதற்கு டிரம்ப் தான் பதிலளிக்க வேண்டும் என்று ரென் கூறினார்.
“இந்த விவகாரத்தில் அமெரிக்க அரசியல்வாதிகளைதான் குற்றம் கூற வேண்டும், அமெரிக்க நிறுவனங்களை அல்ல” என்று ரென் கூறினார்.