மெக்கா: உலகம் முழுவதும் முஸ்லீம்கள் ரமலாம் நோன்பு கடைபிடித்து வருகிற வேளையில், மெக்கா நோக்கி இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்ட சம்பவம் அனைத்துலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தின் பின்னணியில் ஈரான் இராணுவம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆயினும், அவ்விரு ஏவுகணைகளையும் சவுதி அரேபிய இராணுவம் சுட்டு வீழ்த்தியது.
வளைகுடா நாடுகளில் ஒன்றாக திகழும் ஏமனில், பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அங்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசு படைகளுக்கு இடையே சண்டை நடைபெற்று கொண்டிருக்கிறது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவிலும் தங்கள் தாக்குதலை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் சவுதி அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனத்தின் குழாய்கள் மீது கிளர்ச்சியாளர்கள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.
இதில் சவுதி அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வைத்துள்ள ஏமன் தலைநகர் மீது போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது.
இது கிளர்ச்சியாளர்கள் தரப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. உடனே சவுதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மெக்கா மீது இரண்டு ஏவுகணைகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செலுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.