மெக்கா : இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் புனித ஹஜ் யாத்திரையில் 263 மலேசியர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள் என பிரதமர் துறையின் இஸ்லாமிய சமய விவகாரத்துறை அமைச்சர் சுல்கிப்ளி முகமட் அல்-பாக்ரி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் வெளிநாட்டிலிருந்து ஹஜ் யாத்திரைக்கு கொவிட் தொற்று காரணமாக யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சவுதி அரேபிய அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும், சவுதி அரேபிய மக்களும், சவுதி அரேபியாவிலேயே தங்கியிருக்கும் அந்நிய நாட்டினரும் ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளலாம் என அந்நாட்டு அரசாங்கம் அனுமதியளித்தது.
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் 8 மலேசியர்கள் மட்டுமே ஹஜ் யாத்திரையில் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு சவுதி நாட்டிலேயே தங்கியிருக்கும் 263 மலேசியர்கள் ஹஜ் யாத்திரையில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கான இயங்கலை வழியான பயிற்சிகளை தாபோங் ஹாஜி எனப்படும் ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கான கழகம் நடத்தும் என்றும் சுல்கிப்ளி தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை (ஜூலை 15) மெக்காவில் இருக்கும் மலேசிய ஹஜ் யாத்திரிகர்களிடம் தான் நேரடியாக இயங்கலை வழி உரையாடப் போவதாகவும் சுல்கிப்ளி தெரிவித்தார்.
எதிர்வரும் ஜூலை 20-ஆம் தேதி மலேசியாவில் ஹரி ராயா ஹாஜி எனப்படும் புனித ஹஜ் யாத்திரைக்கான பெருநாள் பொது விடுமுறையோடு கொண்டாடப்படவிருக்கிறது