ஆங்காங்: சீனா மீது அடுக்கடுக்கான வணிகப் போர் அதிரடிகளைத் தொடுத்து வரும் டொனால்ட் டிரம்ப் அரசாங்கம் தேசியப் பாதுகாப்புக்கு மிரட்டலாக இருக்கிறது என்று கூறி அண்மையில் ஹூவாவெய் நிறுவனத்தைக் கறுப்புப் பட்டியலிட்டது.
இதில் ஓர் அங்கமாக சீனாவின் ஹூவாவெய் கைத் தொலைபேசிகளில் அண்ட்ரோயிட் மென்பொருள் உள்ளீடு பயன்படுத்தப்படுவதை கூகுள் நிறுவனம் மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அதன் பயனர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த முடிவின் காரணமாக, ஹூவாவெய் கைத்தொலைபேசிகளில் அண்ட்ரோய்ட் தொழில் நுட்பத்தில் இயங்கும் குறுஞ்செயலிகள் செயல்படுத்தப்படாமல் போனது.
இதனைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் தனது இயங்குதள (operating system) மென்பொருளை ஹூவாவெய் கைத்தொலைபேசிகளிலிருந்து மீட்டுக் கொண்டது.
ஹூவாவெய் நிறுவனம் தனக்கான இயங்குதளத்தை உருவாக்கும் முயற்சியில் கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருவதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரிச்சர்ட் யூ கூறினார். அது தொடர்பான முயற்சியை அந்நிறுவனம் ஒப்புக்கொண்டாலும், அதன் செயல்பாடு குறித்து எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.
“இந்த இயங்குதளம் செயல்பாட்டுக்கு வந்ததும் அண்ட்ரோய்ட் போன்ற இயங்குதளத்தின் தேவை எங்களுக்கு தேவைப்படாது” என்று அவர் கூறினார்.
இந்த தடை குறித்து பேசிய ஹூவாவெய் டெக்னாலாஜிஸ் நிறுவனர் ரென் ஷெங்பெ, அமெரிக்க அரசாங்கத்துடனான மோதல்களை முன்கூட்டியே தாம் ஊகித்திருந்ததாகக் கூறியிருந்தார்.
அமெரிக்க நிறுவனங்களுக்கு ஹுவாவெய் நிறுவனம் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார். இந்த நெருக்கடி எவ்வளவு காலம் நீடிக்கும் எனக் கேட்ட போது, அதற்கு டிரம்ப் தான் பதிலளிக்க வேண்டும் என்று ரென் கூறியிருந்தார்.
இதற்கிடையே, இந்தத் தடையை ஆகஸ்டு மாதம் வரையிலும் ஒத்திவைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.