கோலாலம்பூர் – இங்குள்ள தேசிய இருதய மருத்துவமனையில் இன்று புதன்கிழமை காலை 8.50 மணிக்கு காலமான பகாங் மாநிலத்தின் முன்னாள் ஆட்சியாளர் சுல்தான் ஹாஜி அகமட் ஷா அல் முஸ்தாயின் பில்லா அவர்களின் நல்லுடல் இன்று காலை 11.20 மணியளவில் மாமன்னர் அரண்மனைக்குக் கொண்டுவரப்பட்டது.
அங்கு அரசாங்கப் பிரமுகர்கள் அந்த முன்னாள் பகாங் ஆட்சியாளரின் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்தியவர்களில் பிரதமர் துன் மகாதீர், துணைப் பிரதமர் வான் அசிசா, அவரது கணவரும் பிகேஆர் கட்சித் தலைவருமான அன்வார் இப்ராகிம், அமைச்சர் அஸ்மின் அலி ஆகியோரும் அடங்குவர்.
மேலும், மாநில சுல்தான்களும், ஆட்சியாளர்களும், அமைச்சர்களும் சுல்தான் அகமட் ஷா நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மாலை 5.05 மணியளவில் மாமன்னர் அரண்மனையில் இருந்து சுபாங் அரச மலேசிய விமானப்படைத் தளத்திற்கு அன்னாரின் நல்லுடல் கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் அங்கிருந்து சிறப்பு விமானத்தின் மூலமாக அவரது நல்லுடல் பகாங் அரச நகரான பெக்கான் கொண்டு செல்லப்பட்டது.
88 வயதான சுல்தான் அகமட் ஷா மறைவை முன்னிட்டு நாளை மே 23 வியாழக்கிழமை பகாங் மாநிலத்தில் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பகாங் மாநிலத்தில் 40 நாள் துக்கம் அனுசரிக்கப்படும். அடுத்த மூன்று நாட்களுக்கு பகாங் மாநிலத்தில் எந்தவித பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட அனுமதிக்கப்படாது.
பெக்கான் நகரில் பொதுமக்கள், பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் சுல்தான் அகமட் ஷா நல்லுடல் நாளை வியாழக்கிழமை நண்பகல் தொழுகைக்குப் பின்னர் பெக்கான் அரச மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
பகாங் மாநிலத்தின் 5-வது ஆட்சியாளரான சுல்தான் அகமட் ஷா கடந்த ஜனவரி 12-ஆம் தேதி தனது ஆட்சியாளர் பொறுப்பை தனது மகன் அல்-சுல்தான் அப்துல்லா வசம் ஒப்படைத்தார். அதைத் தொடர்ந்து அல்-சுல்தான் அப்துல்லா நாட்டின் 16-வது மாமன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுல்தான் அகமட் ஷா 1979-ஆம் ஆண்டு ஏப்ரல் 26-ஆம் தேதி நாட்டின் 7-வது மாமன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1984 ஏப்ரல் 25 வரை பதவி வகித்தார்.