கோலாலம்பூர் – கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு கோலாகலங்கள், கொண்டாட்டங்கள், சர்ச்சைகள், வாய்ச் சண்டைகள், பரப்புரைகள், கைகலப்புகள், மோதல்கள் என ஒரு திருவிழா போன்று நடந்து முடிந்த இந்தியாவின் 17-வது பொதுத் தேர்தல் – முடிவுகள் வெளியாகும் இன்றுடன் நிறைவு காண்கிறது.
இன்றைய தேர்தல் முடிவுகளை செல்லியல் ஊடகம் உடனுக்குடன் வெளியிடும். செல்லியல் இணையத் தளம், ஐபோன்கள், அண்ட்ரோய்ட் செல்பேசிகளில் இயங்கும் செல்லியல் குறுஞ் செயலி (மொபைல் எப்) ஆகியவற்றின் வழியாக செல்லியல் வாசகர்கள் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
அத்துடன், செல்லியலில் வெளியாகும் முடிவுகள் செல்லியலின் டுவிட்டர் மற்றும் முகநூல் பக்கங்களிலும் உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளப்படும். இந்த இரண்டு சமூக ஊடகங்களின் மூலமாகவும் செல்லியலைப் பின்தொடர்ந்து வாசகர்கள் இந்தியத் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
தங்களின் செல்பேசிகளில் செல்லியல் குறுஞ்செயலியைப் பதிவிறக்கம் செய்து வைத்திருப்பவர்களுக்கு தேர்தல் முடிவுகள் குறுஞ்செய்திகள் (எஸ்எம்எஸ்) வடிவில் உடனுக்குடன் அனுப்பப்படும். தேர்தல் செய்திகள் செல்லியலில் பதிவேற்றம் கண்ட அடுத்த ஐந்து நிமிடங்களில் அந்த செய்தி செல்லியல் குறுஞ்செயலிகளுக்கு குறுஞ்செய்தி வடிவில் அனுப்பப்படும்.
எனவே, செல்லியல் குறுஞ்செயலியை உங்களின் செல்பேசிகளில் பதிவிறக்கம் செய்து கொள்வதன் மூலம் நீங்கள் இருந்த இடத்தில் இருந்து கொண்டே விரல் நுனியில் இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். இந்த வசதியை மலேசியாவிலேயே தமிழில் கொண்டுள்ள ஒரே இணைய ஊடகம் செல்லியல்தான் என்பதையும் இந்தத் தருணத்தில் குறிப்பிட விரும்புகிறோம்.
இந்தியத் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு பிரிக்கப்பட்டு செல்லியலில் வெளியிடப்படும்:
- நாடாளுமன்றத் தொகுதி முடிவுகள்
- மாநிலம் வாரியான நாடாளுமன்றத் தொகுதி முடிவுகள்
- தமிழகத்தின் 38 நாடாளுமன்றத் தொகுதிகள்,
- பாண்டிச்சேரி நாடாளுமன்றம்
- தமிழ்நாட்டின் 22 சட்டமன்ற இடைத் தேர்தல்கள்
இந்திய நேரப்படி காலை 8.00 மணி முதல் (மலேசிய நேரம் காலை 10.30) வாக்குகள் எண்ணப்படும்.
இந்தியாவின் அடுத்த ஆட்சியை அமைக்கப் போவது நரேந்திர மோடி தலைமையிலான பாஜகதான் என தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருக்கும் வேளையில் தமிழக மக்களும் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களும் பேராவலுடன் பரபரப்புடன் எதிர்பார்ப்பது தமிழகத்தின் 22 சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கான முடிவுகளைத்தான்!
ஸ்டாலின் திமுக சார்பில் பெரும்பான்மை பெற்று அதிமுக ஆட்சியைக் கவிழ்ப்பாரா?
அல்லது எடப்பாடி பழனிசாமி தனது சாதுரியத்தாலும், வியூகத்தாலும் தொடர்ந்து தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வாரா? என்பது போன்ற கேள்விகளுக்கான விடைகளோடு பின்னிப் பிணைந்துள்ளது 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள்!
பரபரப்பான முடிவுகளுக்கு காத்திருப்போம்!