கோலாலம்பூர்: கோம்பாக் புத்ரா எல்ஆர்டி இரயில் நிலையக் கட்டமைப்பின் கீழ் எழுப்பப்பட்டு வரும் கார் நிறுத்தும் கட்டிடம் இன்று வியாழக்கிழமை அதிகாலையில் இடிந்து விழுந்ததில் மூவர் சிக்கிக் கொண்டதாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை தெரிவித்தது.
அதிகாலை 1:13 மணியளவில் சம்பவம் குறித்து அவசர அழைப்பு பெறப்பட்டதாககவும், வாங்ஸா மாஜு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, கோம்பாக் காவல் துறை, சுகாதார அமைச்சு அதிகாரிகள் என சுமார் 46 உறுப்பினர்களைக் கொண்டு மீட்பு பணி தொடங்கப்பட்டதாகவும் கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை தெரிவித்தது.
மூவரில் இருவரை மீட்டுவிட்ட வேளையில், ஒரு வங்காள தேச நாட்டவரை மீட்கும் முயற்சி ஆறு மணி நேரம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இடிபாடுகளுக்கு இடையே புதையூண்டு கிடந்தவரை மீட்க கெ9 கண்காணிப்பு நாய்கள் பயன்படுத்தப்பட்டதாக தீயணைப்புத் துறை தெரிவித்தது.
அடித்தளம் சரியாக அமைக்கப்படாததால் இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது, ஆயினும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.